லெபனான் வெடிவிபத்தில் பலியான கனேடிய சிறுமி: பெற்றோர் முன்வைத்த கோரிக்கை!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த 4 ஆம் திகதி நடந்த வெடி விபத்தில் கொல்லப்பட்ட கனேடிய சிறுமி தொடர்பில் பெற்றோர் உருக்கமான கோரிக்கையை முன்வைத்துள்ளனர். பெய்ரூட் துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தொன் கணக்கிலான அம்மோனியம் நைட்ரேட் ரசாயனம் வெடித்து கடந்த 4 ஆம் திகதி மொத்த நகரமும் உருக்குலைந்தது. இந்த கொடூர விபத்தில் 220 பேர் கொல்லப்பட்டதுடம் 3 லட்சம் பேர் குடியிருப்புகளை இழந்தனர். பெய்ரூட்டில் வெடி விபத்தில் சிக்கி கொல்லப்பட்டவர்களில் ஒருவர் கனேடிய குடிமகளான 3 வயது சிறுமி அலெக்ஸாண்ட்ரா நாகியர்.

சம்பவம் நடந்த துறைமுகத்தில் இருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது ட்ரேசி அவத் நாகியர் மற்றும் பால் நாகியர் தம்பதியின் குடியிருப்பு. ஆனால் அந்த வெடி விபத்தின் தாக்கம் இவர்களின் குடியிருப்பையும் பலமாக தாக்கியுள்ளது. இதில் ட்ரேசியின் அரவணைப்பில் இருந்த சிறுமி அலெக்ஸாண்ட்ரா தூக்கி வீசப்பட்டார். அதில் அவரது தலையில் பலத்த காயமேற்பட்டு, மருத்துவமனையில் மூன்று நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

தங்களின் மகள் சிகிச்சையின் பலனாக உயிர் தப்புவார் என்றே கருதி இருந்ததாக கூறும் பால் நாகியர் தம்பதி, தங்களது பிள்ளையின் மரணம் லெபனான் அரசியல், நிர்வாகத்தில் ஒரு மாறுதலை ஏற்படுத்த வேண்டும் என மனதார விரும்புவதாக தெரிவித்துள்ளனர். அலெக்ஸாண்ட்ராவின் மரணம் லெபனானின் ஊழல் மற்றும் சர்வதேச சமூகத்தின் கண்துடைப்பு நடவடிக்கைகளைப் பற்றி பேச நாகியர் குடும்பத்தை தூண்டியுள்ளது.

நேரான பாதையில் தமது மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என தாம் நம்பவில்லை என கூறும் பால் நாகியர், அதனாலையே, சர்வதேச சமூகத்தின் பார்வையை லெபனானில் திருப்ப வேண்டும் என தாம் கோருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். லெபனான் நாட்டில் ஊழல் மலிய முக்கிய காரணம், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், சீனா மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளே என பால் நாகியார் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். நாங்கள் என்ன எதிர்கொள்கிறோம் என்பதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று கூறிய பால் நாகியர், கடந்த 30 ஆண்டுகளில் நாங்கள் எதிர்கொண்டு வரும் பல சம்பவங்களில் இதுவும் ஒன்று என்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!