சீனாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா: 22 பேர் பாதிப்பு!

சீனாவின் உகான் நகரில் முதன்முதலாக கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டு உலகிற்கு தெரிய வந்தது. இதன்பின்னர் உலகம் முழுவதிலும் இந்த வைரசின் பாதிப்பு பரவ தொடங்கியது. கண்ட தொற்று என்ற வகையில் ஆசியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதன்பின்பு சீனாவில் இதன் பாதிப்புகள் கட்டுக்குள் வந்தன. இதனால் அந்நாட்டில் விதிக்கப்பட்டு இருந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டன. எனினும், மற்ற நாடுகளில் தொடர்ந்து ஊரடங்கு முறைகள் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில், சீனாவில் மீண்டும் கொரோனாவின் 2வது அலை பரவ தொடங்கியுள்ளது. அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம், கடந்த 24 மணிநேரத்தில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. 57 பேர் பாதிப்புகளில் இருந்து குணமடைந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

இந்த 22 பேரில் 8 பேர் உள்ளூர்வாசிகள். மற்றவர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இந்த 8 பேரில் பெருமளவிலானோர் சீனாவின் வடமேற்கு பகுதியான ஜின்ஜியாங்கை சேர்ந்தவர்கள் ஆவர்.

இதனால் சீனாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 84 ஆயிரத்து 808 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 4 ஆயிரத்து 634 பேர் உயிரிழந்து உள்ளனர். சீனாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 79,519 ஆக உள்ளது. வெளிநாடுகளில் இருந்து சீனாவுக்கு வந்தவர்களுக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2,263 ஆக உள்ளது.

இதேபோன்று கடந்த 24 மணிநேரத்தில் அறிகுறிகள் எதுவுமின்றி 20 கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இவர்களில் 13 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட, ஆனால் அதற்கான அறிகுறிகளற்ற 300 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!