சுமந்திரனின் பதவிக்கு குறி வைக்கிறது ரெலோ!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவி இம்முறை ரெலோவிற்கு வழங்கப்பட வேண்டும் என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் கோருவதற்கு ரெலோவின் தலைமைக் குழு தீர்மானித்துள்ளது.

ரெலோவின் மத்திய குழுக் கூட்டம் நேற்று திருகோணமலையில் இடம்பெற்ற போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் புதிய நாடாளுமன்ற குழுவின் கூட்டம் எதிர்வரும் 20ம் திகதி கூடும் போது, நாடாளுமன்ற பேச்சாளர் தெரிவும் இடம்பெறுவது வழமையாகும்.

“தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட ரெலோ இம்முறை 3 ஆசனங்களையும், புளொட் ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன. இவற்றின் அடிப்படையில் கூட்டமைப்பு பெற்ற ஆசனங்களின் கணிசமானவற்றை ரெலோ மற்றும் புளொட் பெற்றுள்ளமையினால் பேச்சாளர் பதவி ரெலோவிற்கு வழங்க வேண்டும் என ரெலோவின் தலைமைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை எதிர்வரும் 20ம் திகதி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் முன்வைத்து, வலியுறுத்துவது எனவும் ரெலோவின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2010 நாடாளுமன்ற தேர்தலை அடுத்து ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரனுக்கும், 2015ம் தேர்தலை அடுத்து இலங்கை தமிழரசு கட்சியின் எம்.ஏ.சுமந்திரனுக்கும் பேச்சாளர் பதவி வழங்கப்பட்டது.

இதனை போன்று சுழற்சி முறையில் இம்முறை தங்களுக்கு அந்த பதவி வழங்கப்பட வேண்டும் என்பதே ரெலோவின் நிலைப்பாடு என்றும் கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!