என் மீது கொண்ட நம்பிக்கையால் கிடைத்த மக்கள் ஆணையை வீணடிக்கேன் – கொள்கை விளக்கம் தந்த கோத்தாபய!

ஜனாதிபதித் தேர்தலில் சிறப்பான ஆணையை மக்கள் பெற்று கொடுக்க காரணம் என் மீதான நம்பிக்கையே ஆகும். அதனை ஒருபோதும் வீணடிக்க மாட்டேன்.”

இவ்வாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இன்று (20) கூடிய 9வது நாடாளுமன்றின் முதலாவது அமர்வில் தனது கொள்கை விளக்க உரையை ஆற்றிய போது தெரிவித்தார்.

மேலும் அவரது உரையின் சுருக்க முறையிலான சாராம்சம்,

“எமது ஆட்சி முறை தொடர்பில் மக்கள் மகிழ்ச்சி கொண்டிருப்பதையே எமது நாடாளுமன்ற தேர்தல் வெற்றி குறிப்பிடுகின்றது. நாட்டின் ஒற்றையாட்சியை, புத்தசானத்தை பாதுகாப்பேன் என்று வாக்குறுதி அளித்திருக்கிறேன். அதன்படி பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்குவதுடன் நாட்டின் எந்தவொரு பிரஜையும் தமது மதத்தை பின்பற்றும் சுதந்திரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

நாட்டின் அரசியல் கலாச்சாரத்தில் தெளிவான மாற்றத்தை செய்ய திட்டமிட்டுள்ளோம். உற்பத்தி பொருளாதாரத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். இந்த நாடாளுமன்ற பதவிகள் எமது சிறப்பு உரிமையல்ல எம் மீது சுமத்தப்பட்டுள்ள கடமை என்பதாக கருதி செயற்பட வேண்டும்.

நாட்டில் வறுமைக்குட்பட்ட 1 இலட்சம் பேருக்கும், பட்டதாரிகள் 60 ஆயிரம் பேருக்குமான தொழில் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளோம். இந்த வேலைவாய்ப்புக்கள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும், மாகாணத்துக்கும் சமநிலையிலானதாக வழங்கப்பட வேண்டும்.

தேயிலை, இறப்பர் உற்பத்திகளினால் ஈட்டப்படும் வருமானம் திருப்திகரமாக இல்லை. மூடப்பட்டுள்ள தேயிலைத் தொழிற்சாலைகள் இயக்கப்படும். சிலோன் தேயிலைக்கான மதிப்பை உயர்த்துவோம்.

உயர்தரத்தில் சித்தியெய்திய அனைத்து மாணவர்களையும் பல்கலைக்கழகத்துக்கு இணைத்துக் கொள்வோம். அதற்காக பல்கலைக்கழகத்துக்கு தெரிவாவோர் எண்ணிக்கை உயர்த்தப்படும்.

அனைவரோடும் இணைந்து தேவையான, பொருத்தமான அரசியலமைப்பை உருவாக்குவோம். ஒரே நாடு ஒரு சட்டம் என்ற நிலையை ஏற்படுத்துவோம்.

இன, மத, கட்சி பேதங்களை மறந்து அனைவரும் நாட்டுக்காக ஒன்றிணைய வேண்டிய காலம் வந்திருக்கிறது. அதற்காக எனது அன்புக்கரங்கள் தயாராக உள்ளது.” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!