கணவன், குழந்தைகளை கொல்ல நாய்க்கு போடும் விஷ ஊசியை பயன்படுத்திய பெண் மருத்துவர்: பின்னர் செய்த அதிர்ச்சி செயல்!

இந்தியாவில் நாய்க்கு போடும் விஷ ஊசியை கணவன் மற்றும் 2 குழந்தைகளுக்கு போட்டு கொலை செய்த பெண் தானும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள பிரபல கல்லூரியின் விரிவுரையாளர் டிராஜ் ரானே (42), அவரது மனைவியான மருத்துவர் சுஷ்மா (40) மற்றும் அவர்களது 11 வயது மகன் துருவ், ஐந்து வயது மகள் வான்யா, டிராஜ் ரானேயின் வளர்ப்பு தாய் பிரமிளா ஆகியோர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் காலை 8 மணியாகியும் வீட்டில் எவரும் எழுந்திருக்கவில்லை.

மூதாட்டி பிரமிளா எழுந்து பார்த்த போது, 4 பேரும் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவர் பொலிசுக்கு தகவல் கொடுத்தார். பொலிசார் வந்து, இறந்து கிடந்த 4 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறை அதிகாரி நீலத்பால் கூறியதாவது: டிராஜ் ரானே மற்றும் இரண்டு குழந்தைகளும் ஒரு அறையில் படுக்கையில் இறந்து கிடந்தனர். சுஷ்மா அருகிலுள்ள அறையில் மின்விசிறியில் தூக்கு போட்டு சடலமாக காணப்பட்டார். 3 பேர் இறந்து கிடந்த படுக்கையில் ஒரு ‘சிரிஞ்’ மற்றும் தற்கொலைக் குறிப்பு கடிதம் இருந்தது.

சுஷ்மா தனது மகளுடன் அதிகாலை 5.30 மணியளவில் மருத்துவமனைக்குச் சென்று வந்துள்ளார். அங்கு ஒரு ‘சிரிஞ்’ மற்றும் மயக்க மருந்து ஆகியவற்றை வாங்கி வந்துள்ளார். மருத்துவமனையில் இருந்த செவிலியரிடம், வீட்டின் வளர்ப்பு நாய் தொடர்ந்து குரைத்துக் கொண்டே இருப்பதால், அந்த நாய்க்கு மயக்க மருந்து தேவை என்று கேட்டு வாங்கியுள்ளார். அவர்களும், சுஷ்மா ஒரு மருத்துவர் என்பதால் வீரியமிக்க மயக்க மருந்தை கொடுத்துள்ளனர்.

வீட்டிற்கு வந்த சுஷ்மா, தூங்கிக் கொண்டிருந்த கணவன், மகன் ஆகியோருக்கு விஷ ஊசி போட்டுள்ளார். பின்னர், தனது மகளுக்கும் விஷ ஊசி போட்டுள்ளார். மூவரும் இறந்த பின்னர், சுஷ்மா தனது இரு குழந்தைகளின் கைகளில், இரண்டு வெள்ளை நிற பூக்களை வைத்துள்ளார். அவை, குழந்தைகள் மீதான அன்பின் அடையாளமாக இருக்கலாம். சுஷ்மா எழுதி வைத்துள்ள தற்கொலைக் குறிப்பு கடிதத்தில், ‘தினமும் கொரோனா மரணங்களை பார்க்க முடியவில்லை; அதனால் நாங்கள் அனைவரும் மரணத்தைத் தழுவுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

டிராஜ் ரானேவும், சுஷ்மாவும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். மூதாட்டி பிரமிளா மற்றும் அவர்களது பக்கத்து வீட்டாரிடம் விசாரித்த போது, தம்பதியர் மற்றும் குழந்தைகள் மகிழ்ச்சியாக வாழ்ந்ததாக கூறுகின்றனர். சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!