இவ்வருட இறுதியில் விற்பனைக்கு வரும் கொரோனா தடுப்பூசி: சீனா தகவல்!

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகில் 213க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மருத்துவத்துறையினர் தீவிரமாக போராடி வருகின்றனர். பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆய்வாளர்கள் கொரோனாவிற்கான தடுப்பூசியை கண்டு பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்க பல்வேறு நிறுவனங்கள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன. இதில் ஒரு சில நிறுவனங்களின் மருந்துகள், இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளன. உலகளவில் 2.25 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சீனாவில் கொரோனா தடுப்பூசி, இந்த ஆண்டு டிசம்பா் மாதத்தில் விற்பனைக்கு வரலாம் என்று சீனாவின் ‘சைனோ பார்ம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் தலைவா் லியு ஷிங்ஷென் கூறியதாவது:- தற்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்து, வரும் டிசம்பா் மாத இறுதியில் சந்தையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவருக்கு இரண்டு முறை போடுவதற்கான இரு தடுப்பூசிகளின் விலை 1,000 யுவான்களாக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10,000) இருக்கும்.

சீனாவில் வசிக்கும் 140 கோடி பேருக்கும் அந்தத் தடுப்பூசி போட வேண்டிய அவசியம் இருக்காது என்று கருதுகிறோம். மாணவா்களுக்கும், பணியாளா்களுக்குமே அந்தத் தடுப்பூசி அவசர தேவையாக உள்ளது. மக்கள் நெருக்கம் குறைந்த தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவா்களுக்கு கொரோனா தடுப்பூசி இருக்காது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!