தேவையின்றி குழம்புகிறார் தயாசிறி!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய பட்டியலில் தான் நியமிக்கப்பட்டமை குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகர விசனமடைவது தேவையற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

தேசிய்பபட்டியலில் தெரிவுசெய்யுமாறு தான் யாருக்கும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை எனவும் பொதுஜன பெரமுனவின் உயர்மட்ட குழுவே தன்னை தேசியக் பட்டியல் உறுப்பினராக தெரிவு செய்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய பட்டியல் பரிந்துரையில் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாசவின் பெயரைப் புறக்கணித்து சுரேன் ராகவன் தெரிவு செய்யப்பட்டமை கட்சிக்குள் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளமை தொடர்பாக கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் பேராசிரியர் ஜீ.எல்.பிரீஸ் உள்ளிட்ட ஐவர் அடங்கிய குழுவே தேசிய பட்டியல் உறுப்பினர்களைத் தெரிவுசெய்தது.

29 தேசியப் பட்டியல் ஆசனங்களில் சுதந்திரக் கட்சியில் இருந்து மூவரின் பெயர்கள் பொதுஜன பெரமுனவிடம் வழங்கப்பட்டிருந்தன. அதில் ஆரம்பத்திலிலேயே ஒருவரது பெயர் பொதுஜன பெரமுனவால் நீக்கப்பட்டது.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியானதன் பின்னர் பொதுஜன பெரமுனவிற்கு 17 தேசியப் பட்டியல் ஆனங்களே கிடைத்தன. அதற்கமைய அந்தக்கட்சி சுதந்திரக் கட்சியினால் பரிந்துரைக்கப்பட்டிருந்த இருவரில் ஒருவரை மாத்திரமே தெரிவு செய்தது.

அந்த ஒரு தெரிவாக நான் தெரிவு செய்யப்பட்டேன். அதனைத் தொடர்ந்து பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச சில சந்தர்ப்பங்களில் இது குறித்த தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் கடந்த 20ஆம் திகதி முதலாவது நாடாளுமன்ற அமர்வு நிறைவடைந்தவுடன் அன்றைய தினம் மாலை சுதந்திரக் கட்சியின் செயற்குழு, மத்தியகுழு மற்றும் அரசியல் குழு என்பன கூடியபோது கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன, தேசியப் பட்டியல் ஆசனத்தில் சுரேன் ராகவன் தெரிவுசெய்யப்பட்டமை குறித்து அநாவசியமான கருத்துக்களை வெளியிடுவது பிரயோசனமற்றது எனக் கூறியிருந்தார். இவ்வாறு மைத்திரிபால சிறிசேன கூறிய விடயமே எனது நிலைப்பாடாக இருக்கின்றது.

உண்மையில் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் யார் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் கட்சியின் செயலாளருக்கே காணப்படுகிறது. என்றாலும் பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தில் சுதந்திரக் கட்சியும் இணைந்து தேர்தலில் போட்டியிட்டதால் இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரம் அந்தக் கட்சியின் உயர்மட்டக் குழுவிற்கே காணப்பட்டது. அதற்கமைய அவர்கள் என்னைத் தெரிவு செய்துள்ளார்கள்.

இந்நிலையில், உத்தியோகபூர்வமாக நடந்து முடிந்த ஒரு விடயம் பற்றி தனிப்பட்ட கருத்துக்களைத் தெரிவித்து வருவதால் எவ்வித பிரயோசனமும் இல்லை” என்று குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!