மும்பை அடுக்குமாடி குடியிருப்பு விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு!

மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பை அருகே உள்ள ராய்காட் மாவட்டம் மகாட், காஜல்புரா பகுதியில் தாரிக் கார்டன் என்ற 5 மாடி குடியிருப்பு கட்டிடம் இருந்தது. நேற்று மாலை 6.50 மணியளவில் கட்டிடத்தின் மேல் 3 மாடிகள் திடீரென இடிந்து விழ தொடங்கியது. சில நிமிடங்களில் கட்டிடம் முழுவதுமாக இடிந்து விழுந்தது.

தகவலறிந்து உள்ளூர் போலீசார், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் அந்த பகுதி மக்களுடன் சேர்ந்து கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். பின்னர் மும்பையில் இருந்து விரைந்து சென்ற தேசிய பேரிடர் மீட்பு படையினர், நவீன எந்திரங்களுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

60-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 2 பேர் உயிரிழந்திருந்தனர். 14 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இன்று காலை ஒருவர் உடல் மீட்கப்பட்டது.

அதேவேளையில் 4 வயது சிறுவனை மீட்புப்படையினர் சிறு காயங்களுடன் பத்திரமாக மீட்டனர். உடனடியாக அவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இடிபாடுகளில் இருந்து தற்போது வரை 5 சடலங்கள் மீட்கப்பட்டன. அதில் 3 ஆண்கள் மற்றும் 2 பெண்களின் உடல்கள் ஆகும் இதையடுத்து, அடுக்குமாடி கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!