அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொடூரமானவர்: டிரம்பின் சகோதரி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் சகோதரி மேரி ஆன் தமது சகோதரர் டொனால்டு டிரம்ப் கொடூரமானவர், கொள்கையற்றவர் என பேசியுள்ள ஆடியோ பதிவு ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற டிரம்பின் மருமகள் மேரி டிரம்ப் என்பவரிடமே 2018 மற்றும் 2019 காலகட்டத்தில் மேரி ஆன் குறித்த அதிர்ச்சியூட்டும் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அந்த உரையாடலை மேரி டிரம்ப் பதிவு செய்து பாதுகாத்து வந்துள்ளார்.

டொனால்டு டிரம்பின் சர்ச்சைக்குரிய புலம்பெயர்ந்தவர்களுக்கான கொள்கைகள், அவர்களது குழந்தைகள் குடும்பங்களிலிருந்து பிரித்து வைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் என அனைத்தையும் மேரி ஆன் விலாவாரியாக விமர்சித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் பொறுப்பான ஒரு பதவியில் இருந்து கொண்டு நாளுக்கு நாள் டிரம்ப் பொய் பேசுவதாகவும், அவருக்கு கொள்கை என்பதே இல்லை எனவும் மேரி ஆன் காட்டமாக தெரிவித்துள்ளார். உலகின் கொடூரமான மனிதனை என் குடும்பம் எப்படி உருவாக்கியது என டிரம்பை குறிவைத்து மேரி டிரம்ப் புத்தகம் ஒன்றையும் கடந்த மாதம் வெளியிட்டிருந்தார்.

ஆனால் ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை அந்த புத்தகத்தை பொய்களின் புத்தகம் என குறிப்பிட்டுள்ளது.தனக்காக கல்லூரி நுழைவுத் தேர்வை எழுத நண்பர் ஒருவருக்கு பணம் கொடுத்து தான் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் டிரம்ப் சேர்ந்தார் எனவும், அதுவரை டிரம்பின் வீட்டுப்பாடங்களை தாம் முடித்து அளிப்பதாகவும் மேரி ஆன் அந்த ரகசிய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் ஜனாதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டு அவரது ரத்த தொடர்பு கொண்ட சகோதரியிடமிருந்து வந்துள்ளது. ஆனால், ஜனாதிபதி டிரம்போ அல்லது வெள்ளை மாளிகையோ இந்த பதிவு குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!