டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவை எதிர்த்து டிக்-டாக் நிறுவனம் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு!

சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான டிக்-டாக் உட்பட பல்வேறு செயலிகள் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி இந்தியா அவற்றுக்கு தடைவிதித்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க உள்ளதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார்.

இது தொடர்பாக கடந்த 6-ந் தேதி ஜனாதிபதி டிரம்ப் நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அந்த உத்தரவில், “அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக்கொள்கை மற்றும் பொருளாதாரத்துக்கு டிக்-டாக் அச்சுறுத்தலாக உள்ளது. அரசு ஊழியர்களின் இருப்பிடங்களை கண்காணிக்கவும், தகவல்களை சேகரித்து மிரட்டவும், உளவு பார்க்கவும் இந்த செயலியை சீனாவால் பயன்படுத்த முடியும். எனவே 45 நாட்களுக்குள் அமெரிக்க நிறுவனத்துக்கு அதை விற்க வேண்டும்” எனக் கெடு விதித்திருந்தார்.

இந்த நிலையில் டிரம்ப் நிர்வாகத்தின் இந்த உத்தரவை எதிர்த்து டிக்-டாக் நிறுவனம் அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் ஜனாதிபதி டிரம்ப், வர்த்தகச் செயலாளர் வில்பர் ரோஸ் ஆகியோர் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி டிரம்பின் தீவிர நடவடிக்கையை நியாயப்படுத்த எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் அமெரிக்க அதிகாரிகள் நிறுவனத்தின் உரிமைகளை பறிப்பதாக டிக்-டாக் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!