வெளி போக்குவரத்து இன்றி தனித்தீவில் வசித்துவரும் பழங்குடியின மக்களில் 10 பேருக்கு கொரோனா!

இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் அந்தமான் நிகோபார்க் தீவுகளும் ஒன்று. இந்த யூனியன் பிரதேசத்தில் சுமார் 4 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அந்தமானின் தலைநகரான போர்ட் பிளேயர் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் பரவியுள்ளது. அரசின் தகவலின்படி, 2 ஆயிரத்து 268 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு 37 பேர் உயிரிழந்தனர். இவை அந்தமான் நிகோபார்க் தீவின் முக்கிய நகரங்களின் ஏற்பட்டுள்ள பாதிப்பாகும்.

அந்தமான் நிகோபார்க்கில் பல்வேறு தீவுகள் உள்ளன. இந்த தீவுகளில் பல்வேறு பழங்குடியின மக்கள் சிறுசிறு கூட்டங்களாக வாழ்ந்து வருகின்றனர். இந்த தீவுக்கூட்டங்களுக்கு வெளி ஆட்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தீவுகளுக்கு செல்ல இந்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்றிருக்க வேண்டும். இதற்கிடையில், அந்தமான் தீவுக்கூட்டங்களில் வசித்துவரும் பழங்குடியினங்களில் கிரேட்டர் அந்தமான் பழங்குடியின மக்களும் ஒன்று.

அந்தமான் நிகோபார்க் தீவுக்கூட்டங்களில் ஸ்டிரிட் என்ற தீவில் இந்த பழங்குடிகள் வசித்து வருகின்றனர். பிரிட்டிசாரின் வருகைக்கு முன்னர் 5 ஆயிரம் கிரேட்டர் அந்தமான் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வந்தனர். பிரிட்டிசார் இவர்கள் வசித்த ஸ்டிரிட் தீவை ஆக்கிரமிக்க வந்தபோது நடந்த சண்டையில் பழங்குடியினர் பலர் கொல்லப்பட்டனர். தற்போது கிரேட்டர் அந்தமான் பழங்குடியினரின் மொத்த எண்ணிக்கை 50 என்ற மிகக்குறைந்த அளவிலேயே உள்ளது. இந்த பழங்குடியினத்தை பாதுகாக்கும் வகையில் இவர்களை பாதுகாக்கப்பட்ட இனமாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த பழங்குடியினர் சிலருக்கு அந்தமானின் தலைநகர் போர்ட் பிளேயரில் அரசு பணிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் வசிக்கும் ஸ்டிரிட் என்ற சிறு தீவிற்கு இந்திய அரசு உணவு மற்றும் தங்கும் இட வசதிகளை ஏற்பாடு செய்து வழங்குகிறது. இந்நிலையில் உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தற்போது கிரேட்டர் அந்தமான் பழங்குடியின மக்களையும் விட்டுவைக்கவில்லை. 50 பேரை மொத்த மக்கள் தொகையாக கொண்ட இந்த பழங்குடியினரில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழங்குடியினரில் சிலர் அரசு பணியில் இருப்பதால் அவர்கள் போர்ட் பிளேயரில் உள்ள அரசு அலுவலகம் வந்து தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களிடம் முதலில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த பரிசோதனையில் பழங்குடியினர் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, உடனடியாக ஸ்டிரிட் தீவிற்கு மருத்துவக்குழு சென்றது. அங்கு வாழ்ந்து வரும் கிரேட்டர் அந்தமான் பழங்குடியினருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் மேலும் 4 பழங்குடியினருக்கு தொற்று உறுதியானது. இதனால் 50 பேரை மக்கள் தொகையாக கொண்ட கிரேட்டர் அந்தமான் பழங்குடியினரில் 10 பேருக்கு கொரோனா பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் போர்ட் பிளேயரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். சிகிச்சை பெற்றவர்களில் 6 பேர் குணமடைந்ததையடுத்து அவர்கள் தீவுக்கு அழைத்து வரப்பட்டு வீட்டுத்தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எஞ்சிய 4 பழங்குடியினர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 50 பேரை மொத்தமக்கள் தொகையாக கொண்டு ஸ்டிரிட் தீவில் வசித்து வரும் கிரேட்டர் அந்தமான் பழங்குடியினரில் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!