விக்கியையும் மக்கள் நிராகரித்து விடுவார்கள்! – எச்சரிக்கிறார் பீரிஸ்.

இனவாத சிந்தனையில் செயற்பட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரைப் போல சி.வி.விக்னேஸ்வரனையும் மக்கள் நிராகரித்து விடுவார்கள் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“தாங்களே தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகள் என்ற எண்ணத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அறிவித்து வந்தனர். நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும், தமிழ் மக்களின் குரல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே என்றும் தொடர்ச்சியாக தெரிவித்து வந்தனர். ஆனாலும் இன்று அந்த தர்க்கம் தோற்றுவிட்டது. 2015ஆம் ஆண்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த வாக்குகளுடன் 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கிடைத்த வாக்குகளை ஒப்பிடுகையில் இரண்டு இலட்சம் வாக்குகள் வரை சரிந்துள்ளன.

515963 வாக்குகள் 2015ஆம் ஆண்டிலும், 2020ஆம் ஆண்டில் 321160 வாக்குகளே கிடைத்தன. நாடாளுமன்ற ஆசனங்களும் அக்கட்சிக்கு 16இலிருந்து 10ஆக குறைந்தன. அதற்கு தெளிவான காரணங்கள் உள்ளன. தாங்களே தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகள் என்று அவர்கள் கூறிவந்த போதிலும் அதனை தமிழ் மக்களே நிராகரித்துவிட்டனர்.

எனக்கு தெரிந்த வகையில், 5 வருடங்களாக அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் வரவு செலவுத் திட்டத்திற்கு கண்ணை மூடி வாக்களித்த எந்த எதிர்கட்சியும் உலகில் இல்லை. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதனை நிறைவேற்றியது. அரசியல் தந்திர விடயங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சியை காப்பாற்றியது கூட்டமைப்பே ஆகும். அதன் பிரதிபலனே 2020ஆம் ஆண்டில் மக்கள் தீர்ப்பளித்ததுடன், கட்சிக்குள் முரண்பாடுகளும் ஏற்பட்டன.

மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்காமல், நல்லாட்சி அரசாங்கத்திற்கு துணையாக நின்றது. மாகாண சபைத் தேர்தல்களை தொடர்ச்சியாக பிற்போட்டு வந்தபோது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களையும் அரசாங்கத்திடம் அடகுவைத்து அரசாங்கத்தைக் காப்பாற்றியது.

இதேவேளை இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எச்சரிக்கை ஒன்றையும் பிறப்பித்தார். கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய விக்னேஸ்வரன், உலகில் பழைமைவாய்ந்த மொழியாக தமிழ் மொழியை அடையாளப்படுத்தியிருந்தார்.

இந்த நாட்டில் சுதேச மக்கள் பயன்படுத்திய மொழி தமிழ் மொழியா அல்லது வேறு மொழியா என்ற தர்க்கங்களை ஏற்படுத்தி பிரிவினைவாதத்தை ஏற்படுத்துவதன் ஊடாக முன்நகர்ந்து செல்ல தற்போதைய காலத்தில் முடியாது. இன்று சிந்தனை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் இன்று மாற்றத்துடனான சிந்தனை கொண்டவர்களாக இருக்கின்றனர். இதனைப் புரியாமல் நடந்து கொள்பவர்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஏற்பட்ட நிலைமையே ஏற்படும். விருப்பமோ இல்லையோ, அனைவரையும் நாங்கள் ஏற்றுக்கொண்டு பயணிக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!