கட்டுப்பாட்டுக்குள் வந்தது தீ! – சர்வதேச கடற்பரப்புக்குள் இழுத்துச் செல்லும் பணி ஆரம்பம்.

கிழக்கு கடல்பரப்பில் தீப்பிடித்த, MT New Diamond கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக இந்திய கரையோர பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் நேற்றுமுன்தினம் முதல் இந்திய கரையோர பாதுகாப்புப்படையுடன் இணைந்து இலங்கை கடற்படை மற்றும் வான்படையினர் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை 7.00 மணியளவில் அதில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சுமார் 270,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெயுடன் அனர்த்தத்திற்கு உள்ளான இக்கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதன் மூலம், பாரிய அசம்பாவிதம் மற்றும் கடல் சுற்றாடல், கடல் உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக, சூழலியலாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கப்பலின் பின்புறத்தில் உள்ள தீப்பிடித்த குறித்த பகுதியில் ஏற்படும் அபாயம், எண்ணெய் சேமிப்பு பகுதிக்கு விரைவாக செல்லாத வகையிலான சிறப்பம்சங்களுடன் குறித்த கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து, குறித்த வெளிநாட்டு கப்பல் நிறுவனத்திற்குச் சொந்தமான ‘ஏ.எல்.பி ‘விங்கர்’ (ALP ‘Winger’) ALP Winger இழுவைக் கப்பலுடன் குறித்த கப்பல் இணைக்கப்பட்டு, இந்திய கரையோர பாதுகாப்புப் படையின் விசேட குழுவினரினால் பாதுகாப்பான கடல் பகுதிக்குள் அக்கப்பலை கொண்டு செல்லும் நடவடிக்கையில், இந்திய கரையோர பாதுகாப்புப் படை ஈடுபட்டுள்ளது.

இது தொடர்பில், இலங்கை கடற்படை மற்றும் விமானப் படைக்கு, இந்திய கரையோரப் பாதுகாப்புப்படை மற்றும் குறித்த சர்வதேச நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!