அரசியலமைப்பு உருவாக்க குழுவில் மலையக பிரதிநிதி ஒருவரும் இருக்க வேண்டும்!

புதிய அரசியலமைப்பு உருவாக்கக் குழுவில் மலையக மக்கள் சார்பிலும் ஒருவரை நியமிக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

ஹட்டன், டிக்கோயா நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற 2019ம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வில் இன்று (05) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும்,

“இந்த நாட்டில் வடக்கு கிழக்கு தமிழர்கள், மலையகத் தமிழர்கள் என இரண்டு விதமான தமிழர்கள் வாழ்கின்றார்கள். வடக்கு கிழக்கு மக்களுடைய பிரச்சினை வேறு மலையக தமிழர்களுடைய பிரச்சினை வேறு.

எனவே, இவை இரண்டையும் தனித்தனியாக கையாள வேண்டும். மலையக மக்களுடைய பிரச்சினைகளை அடையாளப்படுத்த வேண்டுமாக இருந்தால் அவர்களுடைய பிரதிநிதித்துவம் கட்டாயமானதாகும். இதனை அரசாங்கம் புரிந்துகொண்டு மலையக மக்களின் பிரதிநிதி ஒருவரையும் நியமிக்க வேண்டும்.

இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு பசில் ராஜபக்ஷ அமைச்சராக வந்தாலும் அல்லது வேறு ஒரு இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர் அமைச்சராக இருந்தாலும் எங்களுக்கு ஆட்சேபனையில்லை. எங்களுடைய நோக்கம் இந்த நாட்டை அபிவிருத்திசெய்து அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய ஒரு நிலைமையை அரசாங்கம் உருவாக்குமானால் அதற்கு நாங்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருக்கின்றோம்.” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!