ஷஹ்ரானுக்கு இஸ்லாமிய அரசுடன் நேரடி தொடர்பில்லை – ஹக்கீம்

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் நாட்டின் நிலையை சீர்குலைக்கும் நோக்கில் செயற்பட்ட மறைமுக சக்தி ஒன்று உள்ளது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும்,

“தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பு அல்லது ஷஹ்ரான் ஹாசிமுக்கு இஸ்லாமிய அரசு பயங்கரவாத அமைப்புடன் நேரடி தொடர்புகள் எதுவுமில்லை. ஈஸ்டர் தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு பயங்கரவாதிகளின் பெயர் பயன்படுத்தப்பட்டமையின் ஊடாக தாக்குதலின் பின்னணியில் செயற்பட்ட மறைமுக சக்தியின் நோக்கம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஷஹ்ரான் உள்ளிட்ட குழுவினர் இந்த மறைமுக சக்தியால், தவளைகளாகப் பயன்படுத்தப்பட்டு – பணத்திற்காக பெறப்பட்ட அடிப்படைவாத குழுவினர். இது ஒரு தடவையில் மாத்திரம் நடத்தப்படவிருந்த தாக்குதல். மீண்டும் இவ்வாறான தாக்குதல் நடத்தப்படுவதற்கான சந்தர்ப்பம் இல்லை.” – என்றார்.

இதேவேளை ஊடகங்கள் இல்லாத நிலையில் குறிப்பிட்ட மறைமுக சக்தி எதுவென்பதை வெளிப்படுத்தமாட்டேன் எனவும் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!