எரியும் கப்பலில் இருந்து டீசல் கசிவு!

கிழக்கு கடற்பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய்க் கப்பலில் இருந்து டீசல் கசிவு ஏற்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எண்ணெய்க் கப்பலைச் சுற்றி, ஒரு கி.மீ தூரம் வரையான கடல்பகுதியில் டீசல் படிமங்கள் நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மத்தல விமான நிலையத்தில் தரித்து நின்று, தீயணைப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் இந்திய கடலோரக் காவல்படையின் டோனியர் கண்காணிப்பு விமானமே நேற்று இந்த டீசல் கசிவை கண்டுபிடித்துள்ளது.

இதையடுத்து, இந்திய கடலோரக் காவல்படையின் டோனியர் விமானத்தில் இருந்து டீசல் படிமங்கள் மீது விசேட இரசாயனம் விசிறப்பட்டுள்ளது.

இதன் மூலம் டீசல் கசிவினால் கடல் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறைக்கப்படும் என்று கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

“தீ பரவுவதை தடுக்க மீட்புக்குழுக்களால் தொடர்ச்சியாக கடல் நீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. எண்ணெய்க் கப்பலின் பின்புறத்திலும் இயந்திர அறைகளிலும் கடல் நீர் தேங்கியுள்ளதால், எண்ணெய்க் கப்பல் பின்னோக்கி சாய்த்திருக்கலாம். இதனால் கப்பலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் டீசல் கடல் நீரில் கலந்திருக்கக் கூடும்” என்று கடற்படைப் பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.

அதேவேளை தற்போதைய நிலையில், மசகு எண்ணெய் கசிவு கடலில் கலக்கும் ஆபத்து இல்லை என்றும் கடற்படைப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!