பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட இரு குழந்தைகளின் தாயார்!

பாகிஸ்தானில் நெடுஞ்சாலையில் குழந்தைகளுடன் பயணித்த தாய் மீது குழுவொன்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்தையடுத்து மூன்றாவது நாளாக பாகிஸ்தானின் பல நகரங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இரண்டு ஆண்கள், குறித்த பெண்ணையும் குழந்தைகளையும் துப்பாக்கி முனையில் வாகனத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படும் நிலையில் சந்தேகநபர்களில் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சந்தேகநபர்கள் இருவரையும் டி.என்.ஏ தடமறிதல் மூலம் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாக பஞ்சாப் மாகாண பொலிஸ் தலைமை அதிகாரி ஜெனரல் இனாம் கானி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

மத்திய பஞ்சாப் மாகாணத்தில் நெடுஞ்சாலை ஒன்றில் காரில் பயணித்த முப்பது வயதுப் பெண் மற்றும் இரு குழந்தைகள் கடந்த புதன்கிழமை இரவு, கிழக்கு நகரமான லாகூருக்கு வெளியே எரிபொருள் முடிந்த நிலையில் வீதியில் நின்றுள்ளனர்.

இந்நிலையில் உதவிக்காக குறித்த பெண் பொலிஸாருக்கு அழைப்பினை மேற்கொண்டுள்ளார். இந்த சூழலில் அவ்வழியால் வந்த ஆண்கள் இருவர் துப்பாக்கி முனையில் அவர்களை காரில் இருந்து இழுத்துச் சென்றுள்ளதுடன் குறித்த பெண்ணை நெடுஞ்சாலையில் உள்ள வயல் பகுதியில் வைத்து துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

பொலிஸார் வருவதற்கு முன்னர் இந்தச் சம்பவம் நடந்தேறியுள்ளதுடன், இதையடுத்து பாகிஸ்தானில் நீதி வேண்டி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பொலிஸார் தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ள நிலையில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!