பொதுக்குழு தீர்மானிக்கும் வரை சர்ச்சையை கிளப்ப வேண்டாம்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளரை கட்சியின் பொதுக்குழுவே விரைவில் ஒன்றுகூடி தீர்மானிக்கும் என்றும், அதுவரைக்கும் எவரும் சர்ச்சையான கருத்துக்கள் எதையும் வெளியிடாமல் இருக்க வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி ஜனநாயகக் கட்சி. அக்கட்சிக்குரிய பதவி நிலைகள் ஜனநாயக முறைப்படியே தெரிவு செய்யப்படும்.

கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம், பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்து கடந்த 9ஆம் திகதியிடப்பட்ட கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.

அவரது கடிதம் கடந்த 12ஆம் திகதி எனது கைக்குக் கிடைத்தது. அந்தக் கடிதத்தில் தனது தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சொந்த விருப்பின் அடிப்படையிலும் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அவரின் பதவி விலகலைக் கேள்விக்குட்படுத்த முடியாது. தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளரை கட்சியின் பொதுக்குழுவே விரைவில் ஒன்றுகூடித் தீர்மானிக்கும்.

அதுவரைக்கும் எவரும் சர்ச்சையான கருத்துக்கள் எதையும் வெளியிடாமல் இருக்க வேண்டும். கட்சியின் ஒற்றுமை கருதி அனைவரும் ஓரணியில் செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!