பரிசோதனை முழுமையடையாத நிலையில் கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ள அனுமதி அளித்த நாடு!

சீன அரசுக்கு சொந்தமான சின்போம் நிறுவனத்துடன் இணைந்து ஐக்கிய அரபு அமீரகம் கொரோனா தடுப்பு மருந்தை பரிசோதித்து வருகிறது. இந்த தடுப்பு மருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் மருத்துவ பரிசோதனையை தொடங்கியது. தற்போது 3-வது கட்ட மருத்துவ பரிசோதனையில் தடுப்பு மருந்து உள்ளது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பூசியை சுகாதார பணியாளர்கள் எடுத்துக்கொள்ள அவசரகால அனுமதியை ஐக்கிய அரபு அமீரகம் வழங்கியுள்ளது. இது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரழிவு மேலாண்மை ஆணையம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “ கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்கள பணியாளர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே கொரோனா தடுப்பு மருந்தை அவர்களுக்கு கிடைக்க அவசரகால அனுமதி வழங்கியுள்ளோம்” எனக்கூறப்பட்டுள்ளது.

31 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு பரிசோதனை நடத்திய பிறகே அவசர கால பயன்பாட்டுக்கு கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் லேசான மற்றும் எதிர்பார்த்த சில பக்க விளைவுகள் ஏற்பட்டது. கடுமையான எந்த விளைவுகளும் ஏற்படவில்லை என்று ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்கத்தொடங்கியுள்ள நிலையில், இந்த அறிவிப்பை அந்நாட்டு அரசுவெளியிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!