விக்கியின் கருத்துக்களால் இன்னொரு யுத்தம் தோன்றுமாம்!

விக்னேஸ்வரனின் கருத்துக்களால் மீண்டும் இனங்களுக்கிடையில் பிரிவினை ஏற்பட்டு, அது மீண்டுமொரு யுத்தத்தை தோற்றுவிக்கும் என்பதாலேயே நான் எதிர்ப்பு தெரிவிக்கின்றேன் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் விக்னேஸ்வரன் கூறிய தமிழ் மொழி தொடர்பான வரலாறு குறித்து எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. நான் இனவாதமற்ற ஒருவராகவே தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுடன் நெருங்கி செயற்படுகின்றேன்.

மக்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது, இந்த நிலையில் விக்னேஸ்வரன் மக்கள் மத்தியிலுள்ள நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலேயே பேசினார்.

இந்த நாட்டின் மூத்த குடிகள் தமிழர் என்றே அவர் கூறினார். இதனையே பிரபாகரன் ஆயுதம் ஏந்தி தங்களுக்கான தாயகமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கையாக முன்வைத்தார்.

தனித்தாயகம் வேண்டுமென்ற கருத்திற்காகவே 30 வருடமாக யுத்தம் செய்து அந்த நிலைப்பாட்டை இல்லாது செய்தோம் இவ்வாறு மீண்டும் அந்த தனித்தாயக நிலைப்பாட்டை நாடாளுமன்றத்திற்குள் கொண்டு வந்தமையினாலேயே நான் அதற்கு எதிர்ப்பை தெரிவித்தேன்.

இவ்வாறான விடயங்களை தொடர்ந்து பேசும் விக்னேஸ்வரன் தமிழ் சமூகத்திற்கு மத்தியில் வீரராக முயற்சிக்கின்றார். இதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் உள்ளிட்ட தமிழ் உறுப்பினர்கள் எப்போதும் யுத்தத்தில் நிராகரிக்கப்பட்ட நிலைப்பாடுகளை நாடாளுமன்றத்திற்குள் கொண்டுவரவில்லை.

நல்லிணக்கத்தின் அடிப்படையில் அனைவரும் இலங்கையர் என்ற முறையில் முன்னோக்கிச் செல்ல அவர்கள் தயாராக இருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!