தென்கொரிய உதவியுடன் வடக்கில் மூன்று பலநோக்கு மீன்பிடித் துறைமுகங்கள்

தென்கொரியாவின் உதவியுடன் நான்கு பல நோக்கு மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளன. இவற்றில் மூன்று வடக்கில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

சாலை, மாதகல், நெடுந்தீவு மற்றும் உடப்பு ஆகிய இடங்களிலுள்ள மீன்பிடித் துறைமுகங்களே, தென்கொரிய உதவியுடன் பலநோக்கு மீன்பிடித் துறைமுகங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

இது தொடர்பாக தென்கொரிய மற்றும் சிறிலங்கா அதிகாரிகளுக்கிடையில் நடத்தப்பட்ட உயர் மட்டக் கூட்டத்தில், அடுத்த சில மாதங்களில், முதலாவது பலநோக்கு மீன்பிடித் துறைமுகத்தின் கட்டுமானப் பணியை ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதலாவது மீன்பிடித் துறைமுகத்தை அமைக்கும் பணி, 2019 ஆம் ஆண்டு முதல் சில மாதங்களுக்குள் உடப்பு அல்லது நெடுந்தீவில் ஆரம்பிக்கப்படும் என்று தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த பலநோக்கு மீன்பிடித் துறைமுகங்கள், மீன்பிடி, வணிகம் மற்றும் சுற்றுலா துறைகளை அபிவிருத்தி செய்யும் வகையில் அமைக்கப்படவுள்ளன.

இதற்குத் தேவையான தொழில்நுட்ப, திட்டமிடல் மற்றும் கடன் உதவிகளை வழங்க தென்கொரியா இணங்கியுள்ளது.

தென்கொரியாவே தனது செலவில் சாத்திய ஆய்வை மேற்கொள்ளும். இந்தப் பணி ஒக்ரோபர் மாதத்துக்குள் நிறைவடையும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!