கொரோனாவால் பாதிக்கப்பட்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து வெளியான அறிக்கை!

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். அரசியல் தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்களும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதைத்தொடர்ந்து அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 22-ந் தேதி உறுதி செய்யப்பட்டது. இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக ஆஸ்பத்திரி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மியாட் ஆஸ்பத்திரி நிர்வாகம் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த பரிசோதனை முடிவு கடந்த 22-ந் தேதி வெளியானது. இதில் விஜயகாந்துக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்து உள்ளது. இதையடுத்து அவர் மியாட் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளது. அவர் கூடிய விரைவில் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

விஜயகாந்த் உடல்நிலை குறித்து தே.மு.தி.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

விஜயகாந்த் வழக்கமாக 6 மாதங்களுக்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக, சென்னை மியாட் ஆஸ்பத்திரிக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் மியாட் ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக சென்ற விஜயகாந்துக்கு, லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது. இருப்பினும், உடனடியாக அது சரி செய்யப்பட்டு விட்டது. தற்போது அவர் பூரண உடல் நலத்துடன் இருக்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

விஜயகாந்தின் உடல் நலம் குறித்து பிரேமலதாவிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டு அறிந்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்ற செய்தி அறிந்து, அவரது மனைவியும், அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்திடம், விஜயகாந்தின் உடல்நலம் குறித்து தொலைபேசி வாயிலாக விசாரித்தேன். அவர் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்” என்று கூறி உள்ளார்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், விஜயகாந்த் விரைவில் குணம் அடைய வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

மேலும் தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்களும் விஜயகாந்த் நலம் பெற விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் விஜயகாந்த், விரைவில் குணம் அடைந்து நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்பி மக்கள் சேவையாற்ற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்” என்று கூறி உள்ளார்.

மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில், “தே.மு.தி.க. தலைவரும், அருமை நண்பருமான விஜயகாந்த், உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை அறிந்தேன். அவர் விரைவில் முழுநலம் பெற வேண்டும் என்ற எனது பெருவிருப்பத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் பொதுப் பணியில் மீண்டும் முழு உற்சாகத்துடன் செயல்பட வேண்டும் எனவும் விழைகிறேன்” என்று கூறி இருக்கிறார்.

வைகோ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் மியாட் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் முழுமையான உடல் நலம் பெற்று தொடர்ந்து பொதுப் பணியாற்ற விரும்புகிறேன்” என்று தெரிவித்து உள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பூரண நலம்பெற இறைவனை வேண்டுகிறேன்” என்று கூறி இருக்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!