இந்தியாவில் கொரோனா தொற்று முடிவுக்கு வராது: விஞ்ஞானிகள் கருத்து!

கொரோனா வைரஸ் பெருந்தொற்று, இந்தியாவில் முதன்முதலாக சீனாவில் மருத்துவம் படித்து வந்த கேரள மாணவிகள் மூலம் கடந்த ஜனவரியில் அடியெடுத்து வைத்தது. மெல்ல மெல்ல கால் பதித்தது. கொரோனாவை பெருந்தொற்று என உலக சுகாதார நிறுவனம் மார்ச் 11-ந் தேதி அறிவித்தது. அதைத் தொடர்ந்து இந்தியா உஷாரானது. மார்ச் 24-ந் தேதி 21 நாள் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். கொரோனா வைரஸ் பரவல் சங்கிலியை உடைப்பதற்கு இதுதான் ஒரே வழி என அப்போது மோடி குறிப்பிட்டார். அப்போது நாட்டில் பாதிப்பு என்றால் அது ஏறத்தாழ 500 பேருக்கு சற்று அதிகம், உயிரிழப்பு வெறும் 12 பேர் தான்.

இன்றைக்கு இந்த 6 மாத காலத்தில் கொரோனா நாடு முழுவதும் பரவி விட்டது. நேற்றைய நிலவரப்படி 57 லட்சத்து 32 ஆயிரத்து 519 பேருக்கு தொற்று பாதிப்பு, 91 ஆயிரத்து 149 பேர் உயிரிழப்பு, தினமும் சராசரியாக 80 ஆயிரம் பேருக்கு மேல் பாதிப்பு என்றாகி விட்டது. தடுப்பூசி சோதனைகளில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளபோதும், கொரோனா எப்போது முடிவுக்கு வரும் என்பதில் தெளிவு இல்லை என்றே விஞ்ஞானிகளின் கருத்து எதிரொலிக்கிறது.

அதுகுறித்த விஞ்ஞானிகள் பார்வை இது-

ரமணன் லட்சுமி நாராயணன் (தொற்று நோய் நிபுணர், அமெரிக்கா):-

உத்தரபிரதேசம், பீகாரில் தொற்று அதிகரிக்கிறது. ஆர்.டி.பி.சி.ஆர். சோதனைகள் நடத்தினால் மட்டுமே அதிகரிக்கிறது. நாட்டின் பல பகுதிகளிலும் பலவீனமான சுகாதார அமைப்புகளைக்கொண்டு மறைக்கப்பட்ட தொற்றுநோய் உள்ளது. தொற்று மெதுவாக பரவுகிறது. ஆனாலும் கட்டுப்பாட்டில் இல்லை.

கணிசமான மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டு வருவதால், அவர்கள் பரப்புவதற்கு வாய்ப்பு இல்லை. அரசும், தனிநபர்களும் எடுக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் அடிப்படையில், தொற்று நோய் குறைந்துள்ளது. ஆனால் பரவல் இன்னும் குறையத்தொடங்குவதற்கு முன்பு சிறிது உயரும்.

சத்யஜித் ராத் (நோய் எதிர்ப்பு நிபுணர், இந்தியா):-

இந்தியாவில் இன்னும் சமூகங்களில் தொற்று பரவும் நிலையில்தான் உள்ளது. முதலில் நகர்ப்புறங்களில் அடர்த்தியான இடங்களிலும், இப்போது நான் பிற பகுதிகளிலும் பரவலான மாறுபட்ட வேகத்தில் பரவி வருகிறது.

வினீதா பால் ( நோய் எதிர்ப்பு நிபுணர், இந்தியா):-

உலகின் பிற பகுதிகளில் இருந்து அனுபவங்கள் வாய்த்தும், இந்திய அரசு அதிகம் கற்றுக்கொள்ளவில்லை. பல்லாண்டு காலமாக பொதுசுகாதார உள்கட்டமைப்பை குறைத்து மதிப்பிட்டதால், தொற்றுநோயை கையாளும் விதம் மோசமாக இருந்தது. ஊரடங்கை சுமத்துவதற்கான நியாயமான காரணம் இதுதான்.

மனித குல வரலாற்றில், வைரஸ் தோன்றிய 8,9 மாதங்களில் தடுப்பூசி சோதனைகள், மரபணுக்கள் வரிசைப்படுத்தல் தொடங்கியது இப்போதுதான். இது தொழில்நுட்ப முன்னேற்றம். இருப்பினும் இந்தியாவில் தொற்று அடுத்து வரும் மாதங்களில் முடிந்து விடும் என்று சொல்வதற்கில்லை. தொடர்ந்து பாதிப்பு கூடத்தான் செய்யும்.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!