தொற்றில்லா நோய்கள் கட்டுபாட்டிற்காக கேரளாவுக்கு விருது வழங்கி சிறப்பித்த ஐ.நா!

கேரள மாநிலம், தொற்று அல்லாத நோய்களைக் கட்டுப்படுத்தியது மற்றும் அது தொடர்பான இலக்குகளை நோக்கிய நிலையான வளர்ச்சி ஆகியவற்றுக்காக, சர்வதேச விருது பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் UN Interagency Task Force (UNIATF) விருது, இந்த வருடம் கேரள மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஐ.நாவின் விருது, ஒரு நாட்டின் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

2019-ம் ஆண்டில், தொற்றில்லா நோய்களைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும், மனநல சிகிச்சைக்குக் கொடுத்த முக்கியத்துவத்துக்காகவும் தொற்றில்லா நோய்களைச் சிறந்த முறையில் கையாள்வதற்கான திட்டங்கள் நிறுவி அதில் வெற்றி பெற்றதற்காகவும் அந்த அமைச்சகங்களைக் கௌரவிக்க வழங்கப்படும் விருது, ஐ.நாவின் இந்த விருது.

விருது குறித்து கேரளாவின் சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா, “கேரளாவில் சுகாதாரத் துறையில் பணிபுரியும் அனைவரின் கடின உழைப்புக்கும் கிடைத்த அங்கீகாரம் இது” என்று கூறியுள்ளார். மேலும், ”கேரள அரசு அடிப்படை சுகாதார மையங்கள் தொடங்கி மருத்துவமனைகள்வரை வாழ்வியல் நோய்களுக்கான சிகிச்சையில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளது. தொற்றில்லா நோய்களில் செலுத்தி வந்த கவனத்தால்தான், கோவிட்-19 கால உயிரிழப்புகளை எங்களால் கட்டுப்படுத்த முடிந்தது” என்று கூறியிருக்கிறார்.

கேரளா அரசு, ஐ.நா-வின் இந்த விருதைப் பெறுவது இதுதான் முதல்முறை. ஐ.நா அமைப்பு கேரள மாநிலத்தை தவிர உலகில் வேறு 6 அமைச்சகங்களுக்கும் இந்த விருதை வழங்கியுள்ளது. கேரளா அரசின் இந்த வெற்றிக்குக் காரணமாக இருக்கும் மாநில நுரையீரல் நோய்க்கட்டுப்பாட்டுத் திட்டம், புற்றுநோய் சிகிச்சைத் திட்டம் மற்றும் பக்கவாத நோய் கட்டுப்பாட்டுத் திட்டம் ஆகியவற்றுக்குப் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!