அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கான கடைசி கொடுப்பனவை வழங்கியது சீனா

அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கான இறுதிக்கட்ட குத்தகைக் கொடுப்பனவை சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் நேற்று சிறிலங்கா அரசாங்கத்திடம் வழங்கியுள்ளது.

சீன நிறுவனத்தின் சிறிலங்கா பிரதிநிதி ரே ரென், சிறிலங்கா துறைமுக அதிகாரசபைத் தலைவர் பராக்கிரம திசநாயக்கவிடம், இறுதிக்கட்டக் கொடுப்பனவுக்கான காசோலையை வழங்கினார்.

மூன்றாவதும், இறுதிக்கட்டமுமாக, 584,194,800 டொலருக்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது.

முதல்கட்டத் தொகையான 292 மில்லியன் டொலர், கடந்த ஆண்டு டிசெம்பரிலும், இரண்டாம் கட்டத் தொகையான 97 மில்லியன் டொலர் கடந்த ஜனவரியிலும் வழங்கப்பட்டன.

எனினும், மூன்றாம்கட்டத் தொகையை வழங்குவதில் இழுபறிகள் ஏற்பட்டிருந்தன.

அம்பாந்தோட்டை துறைமுகப் பகுதியில் அமைக்கப்பட்ட செயற்கைத் தீவையும் தம்மிடம் கையளிக்க வேண்டும் என்று சீன நிறுவனம் அடம்பிடித்ததால், இந்த இழுபறி ஏற்பட்டது.

இதையடுத்து நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து, நேற்று மூற்னாவது கட்டக் கொடுப்பனவை சீன நிறுவனம் நேற்று வழங்கியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!