சர்வதேச அரங்கில் காப்பாற்றுவதாக சீனா வாக்குறுதி!

சர்வதேச அரங்கில் இலங்கைக்கு ஆதரவாக சீனா, இருக்கும் என்றும், நாட்டின் அபிவிருத்திக்குத் தேவையான உதவிகளை வழங்குவதாகவும் சீனாவில் இருந்து வந்த உயர்மட்டக் குழுவினர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் உறுயளித்துள்ளனர்.

சீனாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், கம்யூனிஸ்ட் கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினருமான யாங் யீச்சி தலைமையிலான 7 பேர் கொண்ட சீன உயர்மட்டக் குழுவினர் நேற்றுக்காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைச் சந்தித்தனர்.

இதன்போதே, குறிப்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச அரங்கில் இலங்கையின் சுதந்திரம், இறைமை, மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை பாதுகாப்பதற்கு, சீனா, உறுதியான ஆதரவை வழங்கும் என்றும், சீன அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் நடந்த இந்தச் சந்திப்பின் போது, அண்மைய தேர்தல்களில் கிடைத்த வெற்றிகளுக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு சீன குழுவினர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

போரில் வெற்றியீட்டுவதற்கும், போர் முடிவுக்கு வந்த பின்னர், பொருளாதார செழிப்பை ஏற்படுத்துவதற்காகவும், சீனா வழங்கிய உதவிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

தாம் ஜனாதிபதியாகப் பதவியேற்க முன்னதாக 13 தடவைகள் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்ததாக நினைவுகூர்ந்த கோட்டாபய ராஜபக்ச, அதன் போது, அங்குள்ள கிராமப்புறங்களில் பாரிய அபிவிருத்தி ஏற்பட்டுள்ளதை கண்டதாகவும், அதேவிதமான வளர்ச்சியை இலங்கையில் ஏற்படுத்துவதே தனது நோக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள சீன அரசின் உயர்மட்டப் பிரதிநிதியான, யாங் யீச்சி, இலங்கையுடனான உறவுகளை முன்னேற்றுவதற்கான பல்வேறு துறைகளை சீனா அடையாளம் கண்டுள்ளதாகவும், சீன- இலங்கை சுதந்திர வர்த்தக உடன்பாடு குறித்து மீண்டும் பேச்சுக்கள் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அம்பாந்தோட்டை கைத்தொழில் வலய திட்டம் விரைவுபடுத்தப்படும் என்றும் யாங் யீச்சி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கூடிய விரைவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சீனாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்த யாங் யீச்சி அவரது அதிகாரபூர்வ பயணத்துக்காக தாங்கள் காத்திருப்பதாகவும், கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!