‘ரபேல்’ போர் விமானத்தின் முதல் பெண் விமானி என்ற அந்தஸ்தை பெற்ற பெண்மணி!

இந்திய விமானப் படையில், சமீபத்தில் சேர்க்கப்பட்ட, அதிநவீன, ‘ரபேல்’ போர் விமானத்தின் முதல் பெண் விமானி என்ற சிறப்பை பெறுகிறார், ஷிவாங்கி சிங், 25. இவரது சொந்த ஊர், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள புண்ணிய ஸ்தலமான, வாரணாசி. தந்தை குமரேஷ்வர், சுற்றுலா நிறுவனம் நடத்தி வருகிறார். தாய் சீமா சிங், இல்லத்தரசி.திருப்புமுனைசிறு வயதில், தன் இரு தம்பிகளுடன் கிரிக்கெட் ஆடுவதில் ஷிவாங்கிக்கு கொள்ளை ஆர்வம், ஒரு நாள், ஷிவாங்கியின் தாத்தா, டில்லியில் உள்ள விமானப் படை அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் சென்றார்.

அதுதான், ஷிவாங்கியின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. வீடு திரும்பியதும், அருங்காட்சியகத்தில் பார்த்த பல்வேறு போர் விமானங்களைப் பற்றி, குடும்பத்தாரிடம் கூறிய ஷிவாங்கி, விமானப் படையில் சேர்வது தான் லட்சியம் என, அப்போதே தெரிவித்து விட்டார். அந்த லட்சியம், 2017ல், இந்திய விமானப் படையில் சேர்ந்ததன் மூலம் நிறைவேறியது.விமானப் படை பிரிவில் இணைந்து, வெகு விரைவில், ‘மிக் – 21 பைசன்’ விமானத்தை ஓட்டினார். இவருடன் சேர்த்து, மொத்தம், 10 பெண் விமானிகள், விமானப் படையில் உள்ளனர். அவர்களில், முதன் முதலாக, ரபேல் போர் விமானத்தை இயக்கும் வாய்ப்பு, ஷிவாங்கிக்கு கிடைத்துள்ளது. இதற்காக, தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின், ஹரியானாவின் அம்பாலா விமானப் படை பிரிவில் இணைந்து, ரபேல் போர் விமானத்தின் முதல் பெண் விமானி என்ற சிறப்பை, ஷிவாங்கி பெறுவார்.”என் மகள், இந்திய விமானப் படை சரித்திரத்தில் இடம் பெறுவது பெருமையாக உள்ளது. ஷிவாங்கி, தன் லட்சியத்தை அடைய, முழு அர்ப்பணிப்புடன் உழைத்தார். அதற்கு பலன் கிடைத்துள்ளது,” என, குமரேஷ்வர் கூறுகிறார். ஷிவாங்கியின் தாய் சீமா சிங் கூறியதாவது: சிறு வயதில், துடுக்குத்தனம் அதிக இருந்தாலும், படிப்பில் ஷிவாங்கி கெட்டிக்காரி.

பள்ளி இறுதி வகுப்புகளில், 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் வாங்கினார். பள்ளி இறுதி தேர்வில் வெற்றி பெற்றதும், அடுத்த என்ன திட்டம் என, கேட்டதற்கு, ‘வானத்தை தொடப் போகிறேன்’ என்றாள் ஷிவாங்கி. அவள் நினைத்தது நடந்து விட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.மகிழ்ச்சிரபேல் போர் விமானத்தின் முதல் பெண் விமானியாக உள்ள ஷிவாங்கி குறித்து, வாரணாசி மக்கள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர். ஷிவாங்கி வீட்டருகே வசிக்கும், விஜய், டிங்கு யாதவ் ஆகியோர், ‘போஸ்டர்’ அடித்து மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். ‘எங்கள் பக்கத்து வீட்டுப் பெண், வாரணாசிக்கும், இந்த நாட்டிற்கும் பெருமை சேர்த்திருப்பதை எண்ணிப் பூரிக்கிறோம்’ என, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். ஷிவாங்கி மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துவோம்!

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!