தாய்லாந்தில் பயங்கரம்: ரெயில்-பேருந்து நேருக்குநேர் மோதியதில் 17 பேர் உயிரிழப்பு!

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து கிழக்கே 50 கி.மீ. தொலைவில் சாச்சோயெங்சாவோ மாகாணத்தில் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. புத்த திருவிழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக சிலர் பேருந்தில் பயணம் மேற்கொண்டு உள்ளனர். இந்த பேருந்து, இன்று காலை 8 மணியளவில் கிலாங் கவீங் கிலன் ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே கிராசிங்கில் ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில், பேருந்தில் பயணித்த 17 பேர் கொல்லப்பட்டனர். 29 பேர் காயமடைந்து உள்ளனர். இதனை மாகாண கவர்னர் மைத்ரீ திரிதிலானந்து செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார். இந்த விபத்தில் பேருந்து கவிழ்ந்தது. அதன் மேற்கூரை தூக்கி எறியப்பட்டது. பலரது உடல்கள் ரெயில் தண்டவாளத்தில் கிடந்தன. அவர்களது உடைமைகளும் ஆங்காங்கே கிடந்தன.

இதுபற்றி தகவல் அறிந்து மீட்பு பணியாளர்கள் சம்பவ பகுதிக்கு சென்றுள்ளனர். கிரேன் உதவியுடன் அவர்கள் மீட்பு பணியை மேற்கொண்டனர். இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை உயர கூடும் என கூறப்படுகிறது.

தாய்லாந்து நாட்டில் இதுபோன்ற கொடூர விபத்துகள் நடப்பது வழக்கமாக காணப்படுகின்றன. மோசமான சாலைகள், விரைவு பயணம், குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல் மற்றும் வலுவற்ற சட்ட நடைமுறைகள் ஆகிய அனைத்தும் அந்நாட்டில் விபத்துகள் ஏற்படுவதற்கான காரணிகளாக அமைந்துள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!