“மாத்தையா, கருணா வரிசையில் பிறந்த இனத்துரோகி முரளிதரன்” – சீமான் கடும் கண்டனம்!

மாத்தையா, கருணா வரிசையில் பிறந்த இனத்துரோகி முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படம் கொழும்பு வீதிகளில் திரையிடப்படலாம் ஆனால் தமிழ்நாட்டில் நடக்காது என்று தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் பட சர்ச்சை தொடர்பில் நாம் தமிழர் கட்சி சார்பில் அவர் வெளியிட்ட கண்டன அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

கண்டன அறிக்கையில் சீமான் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் தம்பி விஜய் சேதுபதி நடிப்பதாக அறிந்தேன். தம்பிக்கு நாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன். அவரே புரிந்து கொண்டு படத்திலிருந்து விலகுவார் என அமைதி காத்தேன். தற்போது படத்தின் அடுத்த கட்ட பணிகள் தொடங்கியிருப்பதால் அறிவுறுத்துகிறேன்.

2 இலட்சம் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டு, ஈழ நிலம் முற்றிலும் பிணக்காடாய் மாறியிருந்த சமயம், எந்தவித குற்றவுணர்வுமின்றி “இனவழிப்பு செய்யப்பட்ட அந்த நாள் தான் தனக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான நாள்” என்று கூறியவர் முரளிதரன். கொடுமைக்காரன் ராஜபக்சவை நெல்சன் மண்டேலாவோடு ஒப்பிட்டுப் பேசிய ஒருவர்தான் முரளிதரன்.

மாத்தையா, கருணா வரிசையில் பிறந்த இனத்துரோகி முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படம் கொழும்பு வீதிகளில் திரையிடப்படலாம் ஆனால் தமிழ்நாட்டில் நடக்காது.

ஆகவே, உலகம் முழுவதுமுள்ள தமிழர்களின் பேச்சுக்கு மதிப்பளித்து இந்தப் படத்திலிருந்து தம்பி விஜய்சேதுபதி விலக வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!