கொரோனா தொற்றின் வேகம் குறைந்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்!

உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்ததாக அதிகமான கொரோனா பாதிப்புகளை பெற்றிருக்கும் நாடாக இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது. ஆனால் சமீப காலமாக இந்தியாவில் தொற்றின் வேகம் சரிந்து வருகிறது. சுமார் ஒரு லட்சத்தை எட்டும் அளவுக்கு உயர்ந்த தினசரி பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. அதேநேரம் நாள்தோறும் தொற்றில் இருந்து மீள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. குணமடைந்தோர் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் இருக்கும் நிலையில், அதை மேலும் வலுப்படுத்தும் வகையில் தொடர்ந்து அதிகமான எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

அந்தவகையில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 81 ஆயிரத்து 514 பேர் தொற்றை வென்றுள்ளனர். கடந்த சில நாட்களில் நிகழ்ந்துள்ள அதிகமான குணமடைதல் இதுவாகும். இவர்களையும் சேர்த்து நாடு முழுவதும் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 63 லட்சத்து 83 ஆயிரத்து 441 ஆக உயர்ந்திருக்கிறது.

அதிகப்படியான நோயாளிகள் குணமடைந்திருப்பதன் மூலம் தேசிய அளவிலான குணமடைதல் விகிதமும் அதிகரித்து இருக்கிறது. தற்போதைய நிலையில் இந்த விகிதம் 87.35 ஆக உள்ளது. டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் உள்ளிட்ட கொரோனா போர் வீரர்களின் தன்னலமற்ற பணிகளால் இந்த நிலை எட்டப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் பாராட்டு தெரிவித்து உள்ளது.

நேற்றைய நிலவரப்படி நாடு முழுவதும் 8 லட்சத்து 12 ஆயிரத்து 390 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சையில் இருப்போர் விகிதம் வெறும் 11.11 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக குணமடைந்தவர்களில் 79 சதவீதத்தினர் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இதில் மராட்டியத்தில் மட்டுமே 19 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஒரே நாளில் குணமடைந்துள்ளனர். அடுத்ததாக கர்நாடகாவில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

இதற்கிடையே மேற்படி 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 67 ஆயிரத்து 708 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். இதனால் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 73 லட்சத்து 7 ஆயிரத்து 97 ஆக அதிகரித்து விட்டது. நாட்டில் கடந்த சில நாட்களாக புதிதாக பாதிப்புக்கு உள்ளாவோரை விட, குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது நேற்றும் தொடர்ந்து இருக்கிறது.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் மேலும் 680 உயிர்கள் கொரோனாவால் பறிபோய் இருக்கின்றன. இதனால் நாடு இதுவரை சந்தித்துள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 266 ஆகி இருக்கிறது. அதேநேரம் நாட்டின் கொரோனா பலி விகிதம் 1.52 என்ற அளவுக்கு சரிந்து இருக்கிறது.

மராட்டித்திலும் கொரோனா மரணங்கள் குறைந்திருக்கின்றன. அங்கு மேற்படி 24 மணி நேரத்தில் 158 பேர் மட்டுமே கொரோனாவுக்கு உயிர் விட்டிருக்கின்றனர். அடுத்ததாக கர்நாடகா 75 மரணங்களையும், மேற்கு வங்காளம் 64 மரணங்களையும் சந்தித்து இருக்கின்றன. நாடு முழுவதும் நேற்று முன்தினம் 11 லட்சத்து 36 ஆயிரத்து 183 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் இந்தியாவின் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 9 கோடியே 12 லட்சத்து 26 ஆயிரத்து 305 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை இரு மடங்காக உயரும் காலம் 25.5 நாட்களாக கடந்த ஆகஸ்டு மாத மத்தியில் இருந்தது. ஆனால் தற்போது 72.8 நாட்களாக அதிகரித்து உள்ளது. இதன் மூலம் நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருவதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

கொரோனாவுக்கு எதிரான மத்திய அரசின் தாரக மந்திரமான அதிகப்படியான பரிசோதனை, விரைவான கண்டறிதல் மற்றும் தனிமைப்படுத்தல், தரமான சிகிச்சை போன்றவற்றை மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் சரியாக பின்பற்றுவதால்தான் இந்த சாதனையை எட்ட முடிந்திருப்பதாகவும் அமைச்சகம் பாராட்டு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!