தனது பிடிவாதத்தால் ஜேர்மன் குடியுரிமையை இழந்த லெபனான் மருத்துவர்!

ஜேர்மனியில் இஸ்லாமிய மருத்துவர் ஒருவர், குடியுரிமை தொடர்பான சான்றிதழை வழங்கிய பெண் அதிகாரியுடன் கை குலுக்க மறுத்ததால், குடியுரிமை பெறும் தகுதியை இழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் கடந்த 13 ஆண்டுகளாக குடியிருந்து வந்தவர் 39 வயதான அந்த லெபனான் மருத்துவர். இந்த நிலையில், அந்த இஸ்லாமிய மருத்துவர் ஜேர்மனியில் குடியுரிமை பெற முடிவு செய்து அதற்கான தேர்வுகளிலும் வெற்றியடைந்துள்ளார்.

ஆனால், இறுதியாக சான்றிதழ் வாங்கச் சென்ற வேளையில், பெண் அதிகாரியுடன் கை குலுக்க மறுத்த காரணத்தால், அவருக்கு குடியுரிமை வழங்க மாகாண நிர்வாகம் மறுத்துள்ளது. இந்த முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய அந்த மருத்துவருக்கு, மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது நீதிமன்றம். 2015-ல் நடந்த அந்த விவகாரம் தொடர்பில், நீதிமன்றம் 5 ஆண்டுகளுக்கு பின்னர் அளித்த தீர்ப்பில், அந்த மருத்துவரின் அடிப்படைவாத கருத்துக்கள் ஜேர்மன் சமுதாயத்தில் அவர் ஒருங்கிணைந்து செல்வார் என்பதில் முரணாக உள்ளது என சுட்டிக்காட்டியதுடன், மாகாண நிர்வாகம் எடுத்த முடிவே சரி என்றும் குறிப்பிட்டுள்ளது.

2002-ல் ஜேர்மனியில் குடியேறிய அந்த லெபனான் நாட்டவர், இங்கேயே கல்வி பயின்றதுடன், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் சிரியாவை பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவரை மணம் முடித்தார். இதனையடுத்து 2012-ல் குடியுரிமை பெறுவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்ட அவர், ஜேர்மானிய அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்கும் தீவிரவாதத்தை நிராகரிப்பதற்கும் உறுதி எடுத்துக் கொண்டார்.

இதனிடையே, 2015-ல் குடியுரிமை மறுக்கப்பட்ட விவகாரத்தில் தற்போது நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக பெடரல் நீதிமன்றத்தை நாட இருப்பதாக அந்த மருத்துவர் அறிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!