மீண்டும் தமிழர்கள் போராடவேண்டிய நிலைமை உருவாகும்- ஸ்ரீதரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் தமிழர்களையும் பயன்படுத்தி இந்த அரசாங்கமும் தமது இருப்பினை தக்கவைக்கும் சுயநல போக்கினை கையாண்டு வருகின்றது. நாம் கேட்கும் தீர்வுகள் குறித்து சிந்திக்க அரசாங்கம் தயராக இல்லை இந்த நிலைமை தொடர்ந்தால் மீண்டும் தமிழர்கள் போராடவேண்டிய நிலைமை உருவாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு மக்கள் தெற்கின் சிங்கள மக்களுடன் இணைந்து ஒரே நாட்டுக்குள் வாழ விரும்புகின்றனரா என்றதை அறிய உடனடியாக பொதுஜன வாக்கெடுப்பு ஒன்றினை நடத்துங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை விவாதத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்.

இந்த நாட்டில் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. எனினும் எமது மக்களுக்கான மிகப்பெரிய பிரச்சினை காணாமால் ஆக்கப்பட்டோர் பிரச்சினையாகும். இன்று கிட்டத்தட்ட 500 நாட்களை எட்டவுள்ள இந்த போராட்டம் மிகப்பெரிய தாக்கத்தை செலுத்தியுள்ளது.

வடக்கு கிழக்கில் மக்கள் தொடர்ச்சியாக இந்த போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் . இந்த நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் மூலமாக பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் காணமால் போயுள்ளனர். ஆனால் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்த அரசாங்கம் எந்தவித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

500 நாட்கள் இவ்வாறு போராடுவது என்பது சாதாராண விடயம் அல்ல. இது குறித்து சர்வதேச மன்னிப்பு சபையும் கூட இலங்கையின் கடப்பாடுகள் குறித்து விமர்சித்திருந்தது. இலங்கை பொறுப்புக்களை சரியாக நிறைவேற்றவில்லை என குறிப்பிட்டுள்ளது. நேர்மையான ஒரு பாதையில் அரசாங்கம் பயணிக்கவில்லை என்பதை அரசாங்கமும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இராணுவத்தை காட்டிக்கொடுக்கப்போவதில்லை என ஜனாதிபதி கூறுகின்றார் பிரதமர் வேறு கருத்தினை கூறுகின்றார் அமைச்சர்கள் வேறு ஒரு கருத்தினை கூறுகின்றனர். ஆனால் இழந்தவர்கள் இன்றும் அகதிகளாக அவதிப்பட்டு வாழ்கின்றனர். தமது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேபோல் காணாமால் ஆக்கப்பட்டோர் குறித்து 351 நபர்களின் விபரங்களை காணாமால் போனோர் அமைப்பு வெளியிட்டுள்ளது. பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் அவர்கள் இந்த ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர்.

அதேபோல் விடுதலைப் புலிகளின் சில முக்கிய உறுப்பினர்கள் குடும்பத்துடன் சரணடைந்த புகைப்படங்கள் இன்று வெளிவந்துள்ளது.

ஆனால் இவை எதுவுமே நடைபெறாத வகையில் தான் நகர்கின்றது. இலங்கையில் தமிழர் இனம் மிகக் கொடூரமான வகையில் கொன்றழிக்கபட்டனர் . ஜனாதிபதி கிளிநொச்சியில் நான்காயிரம் குழந்தைகளுக்கு விழா எடுக்க வந்தார் ஆனால் நான்கு வயது குழந்தையின் மனநிலையை புரிந்துகொள்ள முடியாத ஒரு சிங்களத் தலைவராக உள்ளார்.

ஆகவே இந்த நாட்டில் நீதி நியாயம் எவ்வாறு கிடைக்கப்பெறுகின்றது? யாருக்கு நீதி கிடைக்கப்போகின்றது? நாட்டின் உண்மையான பிரச்சினைக்கு முகங்கொடுக்கும் தமிழ் தேசியத்தின் அடையாளத்தை அழிக்கும் நடவடிக்கையே இடம்பெற்று வருகின்றது. திட்டமிட்ட இன அழிப்பு திட்டமிட்ட நில அபகரிப்பு என்ற இரண்டுமே இடம்பெற்று வருகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!