நீர் சறுக்கல் விளையாட்டில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த தமிழ்ப்பெண்!

பல்வேறு துறைகளில் சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் பலரும் அந்த உச்சத்தை தொடும் முன்பு, பல தடங்கல்களையும் சவால்களையும் எதிர்கொண்டிருக்கிறார்கள். அத்தகைய பெண்களில் குறிப்பிடத்தக்கவர்கள், தங்களின் வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து கொள்ளும் தொடரை பிபிசி தமிழ் வழங்குகிறது. அதில் இரண்டாவதுகட்டுரை இது.) நீர் சறுக்கல் விளையாட்டில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து முன்னேறி வருகிறார், சென்னையைச் சேர்ந்த விலாசினி சுந்தர். 25 வயதாகும் விலாசினி தமது தணியாத கனவை நனவாக்க மேற்கொண்டுள்ள பயணத்தை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.

‘நான் பிறந்தது சென்னையில்தான். அத்தனைக்கும் ஆசைப்படு’ என்று எனது அம்மா என்கிட்ட சொல்லிட்டே இருப்பாங்க. என்னோட சின்ன வயசிலிருந்து அதையே கேட்டு வளர்ந்ததாலயோ என்னவோ, எனக்கு சர்ஃபிங் செய்ய ஆசையும் தைரியமும் வந்தது. தொடர்ந்து இந்தியா சார்பில் ஏஷியன் சர்க்யூட் போட்டிகளில் இரண்டு முறை போட்டியிட்டு வென்றுள்ளேன். நான் முதல் போட்டியில் பங்கேற்றபோது, என்கிட்ட சொன்னாங்க, தமிழ்நாட்டில் இருந்து இது போன்ற ஒரு போட்டில் பங்கேற்கும் முதல் பெண் நான் என்று. எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது.

நான் வழக்கமாக பயிற்சி எடுக்கும் கடற்கரை, சென்னைக்கு அருகில் உள்ள கோவளம் எனும் கிராமத்தில் உள்ளது. இந்த மீனவ கிராமத்து இளைஞர்கள் இந்திய அளவில் சிறந்த ‘சர்ஃபிங்’ வீரர்களாக உள்ளனர். அவர்கள் எனக்கு இங்கு பயிற்சி அளிக்கின்றனர். ஆனால் இந்த கிராமத்து பெண்களை, ‘சர்ஃபிங்’ செய்ய அவர்கள் சமுதாயம் அனுமதிப்பதில்லை.

நான் நான்கு வயதிலிருந்து முறையாக நீச்சல் பயிற்சி மேற்கொள்கிறேன். கிட்டத்தட்ட ஆறாவது படிக்கும் காலத்திலிருந்தே நான் தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற தொடங்கிவிட்டேன். தொடர்ந்து 10 ஆண்டுகள் நீச்சல் போட்டிகளில் வெற்றி பெற்று வந்த எனது கவனம், 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு ‘சர்ஃபிங்’ பக்கம் திரும்பியது.

சர்வதேச சர்ஃபிங் வீராங்கனை பெத்தனி ஹாமில்டன் அப்போது விடுமுறைக்காக சர்ஃபிங்கில் ஈடுபடுபவர்கள், தங்களால் எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் சர்ஃபிங்கில் ஈடுபடுபவர்கள் என சில பெண்கள் இருந்தனர். ஆனால், இந்த விளையாட்டை தீவிரமாக எடுத்துக் கொண்டு அதில் வாழ்வாதாரத்தை தேடுபவர்கள் அப்போது இல்லை. அந்த முயற்சியை எடுத்த என்னையும் கூட சிலர் ஏற்கனவே நீச்சல் போட்டிகளில் வெற்றி பெற்று வரும் நீ ஏன் வீணாக ‘சர்ஃபிங்’ செய்ய வருகிறாய் எனக் கேட்டனர். சிறிய வயதில் தொடங்கிய ஒரு விஷயத்தை மாற்ற இங்கு வாய்ப்பளிக்க படுவதில்லை. மாற்றத்தை யாரும் எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை. எனது பெற்றோரும் கூட இதே கேள்வியை சில நேரம் எழுப்பியுள்ளனர். அதனால் இந்த பயிற்சி மேற்கொள்வது குறித்து பலரிடம் நான் பேசியதில்லை.

இந்திய சர்ஃபிங் சம்மேளனம், சர்வதேச சர்ஃபிங் கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்மேளனத்தின்படி இந்தியாவின் 7500 கிமீ தூரம் உள்ள கடற்கரையில் 20 சர்ஃபிங் இடங்கள் உள்ளன. இந்தியாவில் சர்ஃபிங் திருவிழாக்களை நடத்தி இந்த விளையாட்டை பிரபலமடைய செய்ய சிலர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். நடைபெற உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் ‘சர்ஃபிங்’ விளையாட்டுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆனால் இந்தியாவில் இப்போட்டிக்கு இன்னமும் அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்கப்பட்ட பிறகும் இந்திய அரசுக்கு இதை அங்கீகரிக்க என்ன பிரச்சனை உள்ளது என புரியவில்லை. இந்த காரணத்தால் என் போன்ற பெண்களுக்கு ஊக்கம் குறைய வாய்ப்புள்ளது.

எனக்கு இந்த விளையாட்டு துறையில் புதிய உத்வேகம் அளிக்க கூடியவராக இருப்பது அமெரிக்காவை சேர்ந்த ‘சர்ஃபிங்’ வீராங்கனை பெத்தனி ஹாமில்டன். கடந்த 2003 ஆம் ஆண்டு அவர் கடல் அலைகளுக்கு இடையே சறுக்கலில் ஈடுபட்ட போது சுறா தாக்குதலில் ஒரு கையை இழந்தார். ஆனாலும் மனம் தளராத அவர், தொடர்ந்து பல வெற்றிகளை அடைந்து வரலாறு படைத்துள்ளார். அவர் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக கூட எடுக்கப்பட்டுள்ளது. தடைகளை கண்டு மனம் தளரக்கூடாது என்பதை அவர்களிடமிருந்து ஒவ்வொரு முறை சோர்வடையும் போதும் எடுத்துக்கொள்கிறேன்.

மிக சிறிய வயது முதல் விளையாட்டு நீச்சல் என இருந்து விட்டதால், எனது உயர் கல்வியையும் அது சார்ந்ததாக தேர்ந்தெடுக்க முடிவு செய்தேன். அப்போது நாட்டிலேயே முதல் முறையாக சென்னை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் முதுகலை பட்டப்படிப்பு அறிமுகம் செய்தார்கள், அதை அறிந்து கொண்ட நான் அதை படித்து முடித்துள்ளேன். தொடர்ந்து இந்த துறையில் பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் ஆர்வம் உள்ளது.

குறிப்பாக இந்தியாவில் விளையாட்டு துறைகள் பொறுத்த வரை ஆரம்பகால நிபுணத்துவம் (early specialization in sports) அதிகமாக உள்ளது. அதில் சில பெற்றோர்கள் சிறிய குழந்தைகளுக்கு துறை சார்ந்த தேர்வுகளில் அதிக அழுத்தம் தருகின்றனர். அது தவறு. 17 வயது வரையிலும் நிறைய வகையான திறன்களை கற்கவும், அதில் அவர்களை மேம்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் மரபியல் சோதனைகள் மூலம் யாரால் எந்த விளையாட்டை திறம்பட விளையாட முடியும் என்பதையெல்லாம் அறிந்து கொள்ள முடியும். இது தொடர்பான புதிய ஆய்வை விரைவில் துவங்க உள்ளேன்.

மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சாகச விளையாட்டுகள் பயின்று தேர்ச்சி பெறுவது எனது இன்றைய இலக்காக உள்ளது. சர்ஃபிங் செய்கிறேன், கூடவே பேடலிங் போட்டிகளில் பங்கேற்கவும் செய்கிறேன். சர்ஃபிங் பயிற்சிக்காக ‘ஸ்கேட் போர்டிங்’ செய்வேன், இப்போது அதில் நிபுணத்துவம் பெற முயற்சிகளை மேற்கொள்கிறேன். இது போன்ற பயிற்சிகளை பெற்று எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் வீராங்கனை ஆக வேண்டும், இந்த இலக்கை அடையும் வரை எனது கனவுகள் ஓயப்போவதில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!