தயாராக இருக்கும் 3 பெண் விமானிகள்: இந்திய கடற்படை வரலாற்றில் இதுவே முதல்முறை!

உலக அளவில் புகழ்பெற்ற கடற்படையில் ஒன்றான இந்திய கடற்படையில், விமானங்கள், ஹெலிகாப்டர்களை இயக்க பெரும்பாலும் ஆண் வீரர்களே பயன்படுத்தப்பட்டனர். பின்னர் பெண்களையும் கடற்படையில் விமானியாக பணியமர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடற்படையில் பணியாற்றி வரும் பீகாரின் முசாபர்நகரை சேர்ந்த லெப்டினன்ட் ஷிவாங்கி, கடற்படையின் முதல் பெண் விமானியாக கடந்த ஆண்டு டிசம்பர் 2-ந்தேதி தேர்வானார். அடுத்த 15 நாட்களில் டெல்லியின் மால்வியா நகரை சேர்ந்த தியா சர்மா, உத்தரபிரதேசத்தின் தில்காரை சேர்ந்த லெப்டினன்ட் சுபாங்கி ஆகியோரும் கடற்படை விமானிகளானார்கள்.

இதைத்தொடர்ந்து இவர்கள் 3 பேரையும் ஒரே குழுவாக அமைத்து, அவர்களுக்கு டோர்னியர் விமானங்களை இயக்குவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. செயல்பாட்டுக்கு தயாராகும் 2-வது மற்றும் முக்கிய பயிற்சியான இதில் இந்த 3 பேரையும் சேர்த்து 6 பேர் பயிற்சி பெற்று வந்தனர்.

இந்த பயிற்சிக்கு முன்னதாக அவர்கள் இந்திய விமானப்படையில் பகுதி நேரமாகவும், கடற்படையில் பகுதி நேரமாகவும் விமானியாகும் பயிற்சியை பெற்றிருந்தனர். அதன்பின்னர்தான் இந்த டோர்னியர் விமான பயிற்சிக்கு அனுப்பப்பட்டனர்.

இந்த பயிற்சியில் ஒரு மாதம் தரைசார்ந்த பயிற்சிகளும், 8 மாதங்கள் பறப்பது சார்ந்த பயிற்சிகளும் இடம்பெற்றிருந்தது. கொச்சியில் உள்ள தெற்கு பிராந்திய கடற்படையை மையமாக கொண்டு நடந்த இந்த பயிற்சியை இந்த வீராங்கனைகள் வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

இதன் மூலம் டோர்னியர் விமானத்தில் அனைத்துவிதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கான தகுதியை அவர்கள் பெற்றுள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த பயிற்சியை முடித்த வீரர்-வீராங்கனைகளுக்கு நேற்று ஐ.என்.எஸ். கருடா போர்க்கப்பலில் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் தெற்கு பிராந்திய கடற்படை தலைமை அதிகாரி (பயிற்சி) ஆன்றனி ஜார்ஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வீரர்-வீராங்கனைகளுக்கு விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கினார்.

இந்த பயிற்சியை முடித்ததை தொடர்ந்து இந்திய கடற்படையின் டோர்னியர் விமானங்களில் பறந்து கடல் கண்காணிப்பு பணிகளில் முதல் முறையாக இந்த பெண் விமானிகள் அமர்த்தப்படுவார்கள் என பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். இதன் மூலம் இந்திய கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் புதிய அத்தியாயம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!