கட்டார் விமான நிலையத்தில் பெண் பயணிகளை நிர்வாணமாக சோதனையிட்ட அதிகாரிகள்: காரணம் என்ன?

கட்டார் நாட்டில் விமான நிலைய கழிவறையில் பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்றை கண்டெடுத்த நிலையில், சிட்னிக்கு செல்லவிருந்த பெண் பயணிகளை நிர்வாணமாக சோதனையிட்ட சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் அவுஸ்திரேலிய நிர்வாகம் கட்டாரிடம் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. கட்டார் தலைநகர் தோஹாவில் அமைந்துள்ள ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் ஊழியர்கள் சிலர் பிறந்த பச்சிளம் குழந்தையை முனைய கழிப்பறை ஒன்றில் கண்டுபிடித்ததை அடுத்து இந்த பரிசோதனைகள் நடந்ததாக கூறப்படுகிறது.

குழந்தை யாருடையது என்பதில் இதுவரை தகவல் ஏதும் அறியப்படாத நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உரிய கவனிப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையிலேயே, குறித்த குழந்தை விவகாரம் தொடர்பில், 13 அவுஸ்திரேலியர்கள் உள்ளிட்ட பெண் பயணிகளை மருத்துவ சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, நிர்வாண சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

ஆனால் குறித்த பெண்களிடம் சோதனை எதற்கு என்ற தகவலை தெரிவிக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பில், அவுஸ்திரேலிய நிர்வாகம் கட்டார் அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. இருப்பினும், இதுவரை கட்டார் விமான சேவை நிறுவனத்தால் விளக்கமேதும் அளிக்கப்படவில்லை என்றே தெரிய வந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!