கொழும்பு வந்தார் பொம்பியோ – இன்று காலை ஜனாதிபதியுடன் பேச்சு.

அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அரச தலைவர்களுடன் பேச்சு நடத்தவுள்ளார்.

அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ இரண்டு நாள் பயணமாக நேற்று இரவு கொழும்பு வந்தடைந்தார். அவரை பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, வெளியுறவுச் செயலர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே, மற்றும், அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் ஆகியோர் வரவேற்றனர்.

இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைச் சந்தித்து அமெரிக்க இராஜாங்கச் செயலர் பேச்சுக்களை நடத்தவுள்ளார். அத்துடன் பிரதமர் மகிந்த ராஜபக்சவையும் அவர் சந்திக்கவுள்ளார்.

இந்தச் சந்திப்புகளின் பின்னர், அமெரிக்க இராஜாங்கச் செயலர் பொம்பியோ, வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவைச் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

அதேவேளை, ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் பெரும் பாதிப்பை சந்தித்த கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்துக்கும் சென்று அமெரிக்க இராஜாங்கச் செயலரை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தவுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!