குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட இளம் சிறார்களுக்கு இலகுரக வாகன ஓட்டுனர் பயிற்சி!

சந்தர்ப்ப சூழலில், முதல் முறையாக குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட இளம் சிறார்களுக்கான, ஓட்டுனர் பயிற்சி வகுப்பை, சென்னை போலீஸ் கமிஷனர், தரமணியில் நேற்று துவக்கி வைத்தார். முதல்முறையாக, குற்ற சம்பவங்களில் ஈடுபடும் சிறார்கள், மீண்டும், அதேபோன்று சம்பவங்களில் ஈடுபடாமல் தடுக்க, சென்னை காவல் துறை, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதற்காக, வேலைவாய்ப்பு துறை வழியாக, தொழிற்பயிற்சி வழங்கி, மறுவாழ்வு அளிக்கப்படுகிறது.

கடந்த மாதம், கிண்டியில், தொழில் நெறி வழிகாட்டல் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.இதில், குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட, 100 சிறார்கள் பங்கேற்றனர். இதில், 19 பேர், வாகன ஓட்டுனர் பயிற்சி பெற விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து, தரமணி, சாலை போக்குவரத்து நிறுவனம் வழியாக, இலகுரக வாகன ஓட்டுனர் பயிற்சி, நேற்று துவங்கியது.பயிற்சியை, சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் துவக்கி வைத்தார். பயிற்சி முடிவில், வாகன ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட உள்ளது.இந்நிகழ்ச்சியில், அடையாறு காவல் துணை ஆணையர் விக்ரமன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனர் விஷ்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!