ஆடம்பர வாழ்க்கை…காதலிகள்…: – சினிமாவை விஞ்சிய 6 திருடர்களின் கதை!

சென்னையில் இரண்டு கார்களைத் திருடிய ஆறு பேர் செய்த குற்றப் பின்னணியைக் கேட்டு போலீஸாரே அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னை மாங்காடு சிக்கராயபுரம் லீலாவதி நகரைச் சேர்ந்தவர் செல்வம். கார் டிரைவரான இவர், 12.06.2018 அதிகாலை 4.45 மணியளவில் மாங்காடு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பரணி புத்தூர் கோவூர் சர்வீஸ் சாலையில் காரை நிறுத்தினார். அப்போது ஆறு பேர் கொண்ட கும்பல் செல்வத்தைக் கத்தியைக் காட்டி மிரட்டி காரைப் பறித்துச் சென்றது. இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்குச் செல்வம் தகவல் கொடுத்தார்.

அங்கிருந்து மாங்காடு போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாங்காடு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீஸார் காரைத் திருடிய கும்பலைத் தேடி வந்தனர். இந்தச் சம்பவத்தில் குற்றவாளிகளைப் பிடிப்பதற்குள் 13.06.2018 அன்று இரவு 10.15 மணியளவில் மதுரவாயல், வானகரம் மெயின் ரோடு பகுதியில் குடியிருக்கும் திரைப்பட தயாரிப்பாளர் ராமசந்திரனின் கார் டிரைவர் சந்திரனிடமிருந்து சொகுசு காரை ஒரு கும்பல் பறித்தது. இதுதொடர்பாக திருவேற்காடு போலீஸ் நிலையத்தில் சந்திரன் புகார் கொடுத்தார்.கார் திருடும் கும்பலைப் பிடிக்க சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்பேரில் துணை கமிஷனர் ஈஸ்வரன் மேற்பார்வையில் உதவி கமிஷனர் சந்திரசேகரன் தலைமையிலான தனிப்படையினர் கார் திருடும் கும்பலைத் தேடினர். செல்வத்தின் காரைத் திருடிய குன்றத்தூரைச் சேர்ந்த அப்துல் அமீதை போலீஸார் கைது செய்தனர்.

அவரிடமிருந்து காரையும் போலீஸார் மீட்டனர். அப்துல் அமீது மீது ஏற்கெனவே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அப்துல் அமீதின் கூட்டாளிகள் குறித்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, சொகுசு காரைத் திருடியதும் இந்தக் கும்பல் என்ற தகவல் கிடைத்தது. தொடர்ந்து போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் குன்றத்தூர் நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த விஜய், தனுஷ், சாம்சன், மௌலிவாக்கத்தைச் சேர்ந்த அருள்தாஸ் நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரும் சிக்கினர். அவர்களிடமிருந்து சொகுசு காரும் மீட்கப்பட்டது. இதையடுத்து கார் திருடும் கும்பலை சிறையில் போலீஸார் அடைத்தனர். 17 வயது சிறுவன் மட்டும் கூர்நோக்கும் இல்லத்தில் அடைக்கப்பட்டார்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “கார் திருட்டில் ஈடுபட்டவர்கள், 17 வயது முதல் 21 வயது உடையவர்கள். இவர்கள்மீது ஏற்கெனவே வழக்குகள் உள்ளன. காரைத் திருடிய இவர்கள் அடுத்தடுத்து குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். காருக்கு பெட்ரோல் போட்டுவிட்டு அதற்கு பணம் கொடுக்காமல் தப்பிச் சென்றுள்ளனர். அந்தக் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தொடர்ந்து காரில் சென்ற இந்தக் கும்பல், செல்போனை வழிப்பறி செய்துள்ளது. இந்தக் கும்பலில் உள்ளவர்களுக்குக் காதலிகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆடம்பரமாகவும் ஜாலியாகவும் வாழத்தான் காரைத் திருடி அதன் மூலம் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்” என்றனர்.

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “எங்களிடம் சிக்கியவர்கள் குறித்து விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. ஒவ்வொருவரின் கதையும் சினிமாவை விஞ்சும் வகையில் உள்ளது. ஒரே பகுதியைச் சேர்ந்த இவர்கள் கும்பலாக வழிப்பறி, திருட்டு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். செல்வத்தின் காரை வாடகைக்கு முன்பதிவு செய்தவர்கள் அதை திடீரென ரத்து செய்துள்ளனர். இதனால், அங்கிருந்து அவர் திரும்பி வந்தபோதுதான் காரை இந்தக் கும்பல் மிரட்டி திருடிச் சென்றுள்ளது. தொடர்ந்து, ஜி.பி.ஆர்.எஸ் மூலம் காரை நாங்கள் கண்டுபிடித்தோம். வண்டலூர் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. ஆனால், எதிர் சாலையில் கார் சென்றதால், அவ்வழியாக பைக்கில் சென்றவர்களின் உதவியோடு காரை மடக்கினோம்.

அப்போது காரிலிருந்து இரண்டு பேர் தப்பி ஓடிவிட்டனர். அப்துல் மட்டும் எங்களிடம் சிக்கினார். தொடர்ந்து மற்ற இருவர்களை பிடித்தபோதுதான் சொகுசு காரைத் திருடிய விவரம் கிடைத்தது. அவர்களையும் பிடித்தோம். இவர்கள் ஒவ்வொருவருக்குப் பின்னால், ஆள்பலம் இருக்கிறது. அவர்கள் மூலம் சட்டத்தின் பிடியிலிருந்து எளிதில் தப்பிவிடுகின்றனர். மேலும் இவர்கள், சிறுவயது முதலே குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அப்துல் மீது மாங்காடு போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது. விஜய், தனுஷ் ஆகியோர்மீது குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது. சொகுசு காரில் சென்ற இவர்கள் தாம்பரம் ரயில் நிலையம் அருகே ஒரு பெண்ணிடம் செல்போன், செயினைப் பறித்துள்ளனர். அதில் செயின் அறுந்து கீழே விழுந்துவிட்டது. இதுதொடர்பாக அந்தப் பெண் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!