பெற்றோரிடமிருந்து பிள்ளைகளை பிரிப்பதை கைவிட்டார் டிரம்ப்

கடும் அழுத்தங்களிற்கும் எதிர்ப்புகளிற்கும் அடிபணிந்துள்ள டிரம்ப் அமெரிக்காவிற்குள் நுழைய முயலும் குடியேற்றவாசிகளின் குடும்பங்களை பிரிக்கும் நடவடிக்கையை கைவிட்டுள்ளார்.

பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளை பிரிக்கும் டிரம்பின் முடிவிற்கு கடும் எதிர்ப்பு வெளியாகியிருந்த நிலையிலேயே தனது கொள்கையை டிரம்ப் கைவிட்டுள்ளார்.

பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளின் படங்கள் தனது மனதை வேதனைப்படுத்திவிட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

எனினும் ஏற்கனவே பிரிக்கப்பட்ட குடும்பங்களிற்கு இந்த உத்தரவு பொருந்தாது என அவர் தெரிவித்துள்ளார்.

எனது மனைவியும் மகளும் பிள்ளைகளை பெற்றோரிடமிருந்து பிரிக்கும் நடைமுறைகளை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என விரும்புகின்றனர் எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இரக்கமுள்ள எவரும் இதனை கடுமையாக எதிர்ப்பார்கள் என நான் கருதுகின்றேன்,நாங்கள் குடும்பங்கள் பிரிக்கப்படுவதை விரும்பவில்லை எனவும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எனினும் அமெரிக்க எல்லையை சட்டவிரோதமாக கடக்கமுயலும் எவரிற்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மே ஐந்தாம் திகதிக்கு பின்னர் சுமார் 2000 சிறுவர்களை அமெரிக்க அதிகாரிகள் தங்கள் பெற்றோர்களிடமிருந்து பிரித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!