ரஷ்யாவில் நடந்த பயங்கரம்: சாதூர்யமாக தப்பித்த இளம்பெண்!

ரஷ்யாவில் குடியிருப்பு ஒன்றில் நடந்த பார்ட்டியில், மர்ம நபர் துப்பாக்கி தாக்குதல் நடத்த, பிணங்களுக்கு இடையே சடலமாக நடித்து இளம் பெண் ஒருவர் உயிர் தப்பியதாக பொலிஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. ரஷ்யாவின் Yekaterinburg நகரில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றிலேயே குறித்த பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. Dmitry Zakharov என்ற 34 வயது நபர் தமது நண்பர்களுக்கு தனது குடியிருப்பில் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்து அழைப்பு விடுத்துள்ளார்.

சமூக ஊடகம் வாயிலாக விடுக்கப்பட்ட இந்த அழைப்பை ஏற்று டிமித்ரியின் நெருங்கிய நண்பர்கள் மூவரும், 16 வயது Maria Kosintseva மற்றும் அவரது தோழியான Viktoria Paustovskaya ஆகிய இருவரும் ஒப்புக்கொண்டு சம்பவத்தன்று பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.

ஆனால், பார்ட்டிக்கு இடையே, கணினி விளையாட்டில் அதிக நாட்டம் கொண்ட டிமித்ரி தம்மிடம் இருந்த துப்பாக்கியால் விருந்தினர்கள் மற்றும் நண்பர்கள் மீது சரமாரியாக சுட்டுள்ளார்.

இதில் மூவர் கொல்லப்பட்டதுடன் ஒருவர் ஆபத்தான நிலையில் காயங்களுடன் தப்பியுள்ளார்.

இந்த நிலையிலேயே 16 வயது Maria Kosintseva அந்த கொலைவெறித் தாக்குதலில் இருந்து தப்பிய தகவல் வெளியானது.

தாக்குதலுக்கு இடையே மரியா கோசிந்த்சேவா சடலங்களுக்கு இடையே, பிணமாக கிடந்துள்ளார்.

இவரது தோழி Viktoria Paustovskaya குண்டடிபட்ட நிலையில், சமையலறையில் இருந்து கழிவறைக்கு சென்று ஒளிந்து கொண்டு தப்பியுள்ளார்.

இதனிடையே, விருந்தில் கலந்து கொண்ட அனைவரும் கொல்லப்பட்டதாக கருதிய டிமித்ரி, தாக்குதலை முன்னெடுத்த அதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆனால், உயிர் தப்பிய இரு பெண்களும், டிமித்ரி தற்கொலை செய்து கொண்டது தெரியாமல், சமூக ஊடகம் வாயிலாக உதவிக்கு கோரிக்கை விடுத்துள்ளதுடன், சம்பவப் பகுதிக்கு பொலிசார் வரும் வரையில் சுமார் 4 மணி நேரம் பயத்துடன் காத்திருந்துள்ளனர்.

எப்போது வேண்டுமானாலும் தாங்கள் கொல்லப்படலாம் என்றே பயத்துடன் காத்திருந்ததாகவும், பொலிசார் வரும் வரையில் சடலங்களின் இடையே இருந்து விலகிச்செல்லவில்லை எனவும் மரியா கோசிந்த்சேவா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கழிவறையில் ஒளிந்து கொண்டு தப்பிய விக்டோரியா, குண்டடிப்பட்டதால் ரத்தம் வழிய அவதிப்பட்டுள்ளார்.

முகம் தெரியாத ஆண்களுடன் பார்ட்டி கொண்டாட சென்றிருந்தாலும், அந்த நபர்கள் பாகியல் துன்புறுத்தல் ஏதும் மேற்கொள்ளவில்லை எனவும் மரியா தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்ய குற்றவியல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!