மெனிங் சந்தையின் மரக்கறி உற்பத்தியாளர்கள் குறித்து அரசாங்கம் விசேட கவனம்!

கொழும்பு புறக்கோட்டை மெனிங் சந்தை மூடப்பட்டுள்ள நிலையில், மரக்கறி உற்பத்தியாளர்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதன்படி, நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள மரக்கறி உற்பத்தியாளர்களின் அறுவடைகளை, விற்பனை செய்வதற்காக பேலியகொட பிரதேசத்தில், வேறு ஒரு பகுதியை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதற்கமைய, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான வளாகத்தை இதற்காக ஒதுக்குவதுவற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார பாதுகாப்பு வேலைத்திட்டத்தை முறையாக பின்பற்றி, வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இந்த நிலையிலேயே, இது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெனிங் வர்த்தக சந்தைக்கு நாளாந்தம் இரண்டாயிரம் மரக்கறி லொறிகள் வருகை தருகின்ற நிலையில், இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

இதேவேளை, சுகாதார பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்தியதன் பின்னர் கொழும்பு மெனிங் சந்தையின் வர்த்தக நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!