மாவீரர் நாளில் அஞ்சலி செலுத்துவது குறித்து 10 தமிழ் கட்சிகள் ஆராய்வு!

சிறு சிறு குழுக்களாகச் சென்று மாவீரர் நாளன்று, அஞ்சலியைச் செலுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு, யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை கூடிய 10 தமிழ்க் கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாவீரர் தினமான 27 ஆம் திகதி காலையிலிருந்து மாலை வரையில் இவ்வாறு குழுக்களாகச் சென்று சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அஞ்சலி செலுத்துவதற்கு இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் சி.வி.கே.சிவஞானத்தின் இல்லத்தில் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவீரர் தினத்தை எவ்வாறு அனுஷ்டிப்பது என்பது குறித்து முக்கியமாக ஆராயப்பட்டது.

மாவீரர் துயிலும் இல்ல ஒருங்கிணைப்பாளர்களை இதற்காக இதற்காக எதிர்வரும் சனிக்கிழமை சந்தித்தப் பேசுவது எனவும், அதன் பின்னர் இவ்விடயத்துக்கான ஒழுங்ககள் குறித்து இறுதி முடிவை எடுப்பதெனவும் இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட மாவை சேனாதிராஜா –

“அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இரு முக்கிய விடயங்கள் பற்றி ஆராய்ந்தோம். தமிழ் தேசியக் கட்சிகளின் ஒற்றுமை தொடர்பாகவும், மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

தமிழ் தேசிய கட்சிகளின் ஒற்றுமை தொடர்பில் தமிழ் தேசியத்தின்பால் உள்ள கட்சிகளின் தலைவர்களை அழைத்து பேசுவதென தீர்மானித்திருந்தோம். மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பிலும் ஆராய்ந்தோம்.

அந்தந்த துயிலுமில்ல பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடுவதென தீர்மானித்தோம். கொரோனா வைரஸ் காலத்தில் மக்கள் பாதுகாப்பாக எவ்வாறு அஞ்சலி செழுத்த வேண்டும் என்பதனை அடுத்தவாரமளவில் அறிக்கை மூலம் வெளியிடுவோம்.

மாவீரர் தின நினைவேந்தல், இறந்த உறவுகளுக்கு மக்கள் அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதில் திட்டவட்டமாக உள்ளோம்.மாவீரர் தின நிகழ்வுகளை தடையின்றி நடத்துவதற்கு தேவைப்பட்டால் அரசாங்கத்துடன் பேசுவோம்.” என்று கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!