வடக்கு, கிழக்கினால் தான் நாட்டுக்கு கடன்!

வடக்கு கிழக்கு பிரதேசங்களின் அபிவிருத்திக்காகவே அதிகளவு சர்வதேச கடன்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடன் நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ள போதிலும் அவற்றில் இருந்து விடுபடும் மாற்று வேலைத்திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்திடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதலாம் நாள் விவாதத்தில் நேற்று உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது, கடந்த 2015ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டுவரை நாட்டில் எந்தவொரு பொருளாதார வளர்ச்சியும் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தமக்கு நாட்டை ஒப்படைக்கும் போது, மிக மோசமான நாடாகவே காணப்பட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியில் மிகப்பெரிய இரண்டு சவால்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஒன்று ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் நாடு கண்ட பொருளாதார வீழ்ச்சி எனவும் மற்றையது கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த இரண்டும் நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ள போதும் தாம் கடன்களைச் செலுத்தும் வேலைத் திட்டங்களை முன்னெடுத்தே வருகின்றோம் என பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!