சசிகலாவின் விடுதலை ஆட்சியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது: முதல்வர் பழனிசாமி!

சசிகலாவின் விடுதலை அதிமுகவிலும் சரி, ஆட்சியிலும் சரி எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நான்கு பேர் குற்றவாளிகள் என பெங்களூர் தனி நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது.

குற்றவாளிகள் நால்வருக்கும் நான்கு ஆண்டு சிறைத்தண்டனையும், பத்து கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து பெங்களூர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிமன்றம் நால்வரின் தண்டனையையும் ரத்துசெய்து அவர்களை விடுதலை செய்தது. இதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு செய்தது. வழக்கு விசாரணையின் போதே ஜெயலலிதா உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

இதனையடுத்து, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் பெங்களூர் தனி நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

இதைத் தொடர்ந்து பிப்ரவரி 15-ம் தேதி சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். வரும் 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தோடு அவரது நான்கு ஆண்டு தண்டனைக் காலம் முடிவுக்கு வருகிறது.இந்தநிலையில், சிறையில் சசிகலாவின் நன்னடத்தை காரணமாக அவர் முன்கூட்டியே விடுதலை செய்யப்படலாம் என்கிற தகவல் வெளியானது.

சசிகலா, தனக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்தியதால் அவர் விடுதலை தொடர்பான விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.இந்த நிலையில், கோவையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு மூலம் 313 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். நீட் தேர்வு கூடாது என்பதுதான் அதிமுக அரசின் நிலைப்பாடு. இந்தியாவிலேயே நீட் தேர்வு வேண்டாம் என எதிர்த்து போராடும் ஒரே மாநிலம் தமிழநாடு மட்டுமே என்றார்.

இதனையடுத்து, ஜெயலலிதாவின் உயிர்தோழி சசிகலாவின் விடுதலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, பதிலளித்த முதல்வர், சசிகலாவின் விடுதலையால், அதிமுகவிலும் சரி, ஆட்சியிலும் சரி எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது என உறுதிபடத் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!