முக்கிய வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட நால்வர் விடுதலை! – வெளிநாட்டுப் பயணத்தடை நீக்கம்..

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகள், திவிநெகும வழக்கிலிருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது, திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து 91 மில்லியன் ரூபா நிதியை பயன்படுத்தி, பயனாளர்களுக்கு கூரைத்தகடுகள் பகிர்ந்தளிக்கப்பட்டமை உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரச நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகளின் கீழ், சட்டமா அதிபரினால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பசில் ராஜபக்ஸ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் நிஹால் ஜயதிலக்க, திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க மற்றும் அதன் முன்னாள் பிரதி பணிப்பாளர் நாயகம் பந்துல திலக்கசிறி ஆகியோர் குறித்த வழக்கின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், பிரதிவாதிகள் சார்பான சாட்சியங்கள் எதுவும் இன்றி, பிரதிவாதிகளை அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலும் இருந்து விடுவித்து விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட நால்வருக்கும் வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையும் நீக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!