நாட்டைத் தாக்கவுள்ள ஆபத்து : வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவின் வடமேற்கு பிராந்தியத்தில் உருவாகியுள்ள வளிமண்டல தாழமுக்கமானது திருகோணமலையில் இருந்து 500 கடல்மைல் தொலைவில் நிலைகொண்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களமானது இன்று விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த தாழமுக்கமானது அடுத்துவரும் 24 மணித்தியாலத்தில் சூறாவளியாக மாற்றமடையுமென அறிவிக்கபட்டுள்ளது.

மேலும், இந்த சூறாவளியானது மட்டக்களப்பு மற்றும் பருத்தித்துறை ஊடாக நாட்டின் நிலப்பரப்பிற்குள் ஊடுருவும் என எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

இதன்காரணமாக, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்பின் ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிராந்தியங்களில் நாளை முதல் தொடர்ந்தும் மழையுடனான வானிலை நிலவுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த கடற்பிராந்தியத்தில் காற்றின் வேகமானது மணிக்கு 80 முதல் 100 கிலோமீற்றர் வேகத்தில் வீசுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு கடற்பிராந்தியங்கள் கடும் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 2 ஆம் திகதியில் இருந்து வடக்கு மற்றும் கிழக்கு கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணிக்கு 100 கிலோமீற்றரை விட அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல், தெற்கு மற்றும் ஏனைய சில மாகாணங்களில் நாளை முதல் மழையுடனான வானிலை நிலவும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பகுதிகளில் 200 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் ஏனைய சில இடங்களில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, அனர்த்தங்கள் தொடர்பில் காணப்படும் அச்சநிலைமை காரணமாக நாட்டை சூழவுள்ள அனைத்து கடற்பிராந்தியங்களிலும் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்களை கடலுக்கு செல்ல வேண்டாமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஏற்கனவே கடலுக்கு சென்றுள்ள மீனவர்களை உடனடியாக கரைக்கு திரும்புமாறும் விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டு மக்கள், விசேடமாக கரையோர பிரதேசங்களில் வாழும் மக்கள் வளிமண்டலவியல் திணைக்களத்தின் உடனுக்குடனான அறிவுறுத்தல்களை கவனத்தில் கொண்டு செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.

மேலும், அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கம், மண்சரிவு மற்றும் வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்கள் குறித்து மிகவும் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், ஏதேனும் அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் 117 என்ற அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையத்தின் அவசர தொலைபேசி அலக்கங்ககுக்கு அழைப்பை ஏற்படுத்தி அது குறித்து அறிவிக்குமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!