ஈரானுக்கு அடுத்த பேரிழப்பு: ஆளில்லா விமானம் மூலம் படுகொலை செய்யப்பட்ட ராணுவ மூத்த அதிகாரி!

ஈராக்கில் ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானின் தலைமை அணு விஞ்ஞானியான மொசென் பக்ரிசாதே கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைநகர் டெஹ்ரானில் காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இந்த படுகொலையின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள ஈரான் அணு விஞ்ஞானியின் கொலைக்கு பழி தீர்ப்போம் எனவும் சூளுரைத்துள்ளது.

இந்த நிலையில் தலைமை அணு விஞ்ஞானி கொலை செய்யப்பட்டதன் பதற்றம் தணிவதற்குள், ஈராக்கில் ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இருப்பினும் கொல்லப்பட்ட ராணுவ அதிகாரியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.

அவர் ஈராக்-சிரியா எல்லையில் காரில் சென்று கொண்டிருந்தபோது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்,

இந்த தாக்குதலில் அவருடன் மேலும் 3 பேர் உயிரிழந்ததாகவும் ஈராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த ராணுவ அதிகாரி கொல்லப்பட்ட பகுதியானது ஒரு காலகட்டத்தில் ஐ.எஸ் அமைப்பின் கீழ் இருந்ததாகும், ஆனால் தற்போது ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் துணையுடன் சிரியா ராணுவம் கைப்பற்றியுள்ளது.

அணு விஞ்ஞானியின் படுகொலைக்கு பழி தீர்ப்போம் என ஈரான் தலைவர்கள் சூளுரைத்த சில மணி நேரங்களிலேயே, ஈராக்கில் இன்னொரு முக்கிய ராணுவ அதிகாரி கொல்லப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் இந்த சம்பவம் குறித்து ஈரான் தரப்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!