புயல் எச்சரிக்கை: குமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை!

புரெவி புயல் காரணமாக தமிழக அரசு கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமாநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறைக்கு ஈடாக ஜனவரியில் ஒரு சனிக்கிழமை பணி நாளாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புரெவி புயல் இன்று (டிசம்பர் 3) இரவு அல்லது நாளை அதிகாலை பாம்பன் – கன்னியாகுமரி இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது பலத்த காற்று 70-80 கி.மீ வேகத்தில் வீசும். சில நேரங்களில் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்ட கடற்கரைகளுக்கும் தெற்கு கேரளா கடற்கரைப் பகுதிகளுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புரெவி புயல் கரையை கடப்பதற்கு முன்னதாக தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புரெவி புயல் காரணமாக தமிழக அரசு கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமாநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது.

மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் புயல் கரையைக் கடக்க உள்ளதால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

புரெவி புயல் காரணமாக, அரியலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பொழியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன், ‘புரெவி புயல் பாம்பனுக்கு தென் மேற்கு திசையில் நிலை கொண்டுள்ளது. புரெவி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்திருக்கிறது. ராமநாதபுரத்துக்கும் – தூத்துக்குடிக்கும் இடையே இன்று இரவு அல்லது நாளை அதிகாலை கரையைக் கடக்கும். புயல் கரையைக் கடக்கும்போது 60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.’ என்று கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!