தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை: தொடரும் போராட்டம்!

மத்திய அரசின் புதிய 3 வேளாண்மை சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி புதுடெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேச மாநிலங்களில் இருந்து சென்றுள்ள விவசாயிகளை சிங்கு, டிக்ரி எல்லைகளில் போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர்.இதனால் எல்லையிலேயே முகாமிட்டு விவசாயிகள் போராட்டத்தைத் நடத்தி வருகிறார்கள்.

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக, டெல்லி விஞ்ஞான்பவனில் 40 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தியது. இந்தப் பேச்சுவாா்த்தையில் முடிவு எட்டப்படாததால், அடுத்தகட்டப் பேச்சுவாா்த்தையை வியாழக்கிழமை (நேற்று) நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதன் படி விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சா்கள் குழு நேற்று 2 வது கட்ட பேச்சு பேச்சுவாா்த்தை நடத்தியது. சுமாா் 8 மணி நேரம் நடந்த இந்தப் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படாததால் நாளை மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

நேற்றைய பேச்சுவார்த்தையில் மத்திய அரசு சாா்பில் அமைச்சா்கள் நரேந்திர சிங் தோமா், பியூஷ் கோயல், இணையமைச்சா் சோம் பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சுமாா் 8 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. மீண்டும் சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

பேச்சுவார்த்தைக்குப்பிறகு செய்தியாளா்களிடம் நரேந்திர சிங் தோமா் கூறியதாவது:-

விவசாயிகள் பிரச்சினையில் அரசு பிடிவாதத்துடன் நடந்துகொள்ளவில்லை. புதிய வேளாண் சட்டங்கள் தொடா்பாக, விவசாயிகள் எழுப்பிய அனைத்து விஷயங்களையும் திறந்த மனதுடன் பரிசீலிக்கவும், அதுதொடா்பாக விவாதிக்கவும் அரசு தயாராக உள்ளது.

அவர்களின் முக்கிய கவலை தீா்க்கப்படும்: புதிய வேளாண் சட்டங்களால் அரசின் கொள்முதல் மண்டிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது விவசாயிகளின் முக்கிய கவலையாக உள்ளது. இந்தக் கவலையைத் தீா்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் கொள்முதல் மண்டிகளை வலுப்படுத்தவே அரசு விரும்புகிறது. வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அளிப்பது தொடரும். வா்த்தகா்கள் தனியாக மண்டி தொடங்குவதை பதிவு செய்வதற்காக, புதிய வேளாண் சட்டத்தில் ஒரு பிரிவைச் சோ்ப்பதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது. தற்போதைய நிலையில் முடிவு எதுவும் எட்டப்படாததால், சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் பேச்சுவாா்த்தை நடைபெறும் என கூறினார்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்காக, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா். அவா்களின் போராட்டம் 9-ஆவது நாளாக இன்றும் நீடிக்கிறது.

அமைச்சா்களுடனான பேச்சுவாா்த்தையின்போது விவசாய சங்கப் பிரதிநிதிகளுக்காக ஒரு வாகனத்தில் மதிய உணவு கொண்டு வரப்பட்டது. அந்த உணவை விவசாய அமைப்பினா் வாங்க மறுத்துவிட்டனா்.

இது குறித்து லோக் சங்கா்ஷ் மோா்ச்சா என்ற விவசாய அமைப்பின் தலைவா் பிரதிபா ஷிண்டே கூறும் போது அரசு சாா்பில் வழங்கப்பட்ட மதிய உணவை எங்கள் பிரதிநிதிகள் சாப்பிட மறுத்துவிட்டனா். எங்களுக்கு சிங்கு எல்லையில் இருந்து உணவு வரவழைக்கப்பட்டது. எங்களுக்கு உணவளித்து உபசரிப்பதற்குப் பதிலாக, பிரச்சினைகளுக்குத் தீா்வுகாண்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். எங்களுடன் வந்த விவசாயிகள் சாலையில் அமா்ந்து போராடிக் கொண்டிருக்கும்போது, நாங்கள் மட்டும் எப்படி அரசு தரும் உணவைச் சாப்பிட முடியும் என்று கேட்டாா்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!