தென் கொரிய முன்னாள் பிரதமர் கிம் ஜாங் பில் மறைவு

தென் கொரிய முன்னாள் பிரதமர் கிம் ஜாங் பில் 92 வயதில் முதுமை சார்ந்த உடல்நலக் குறைவால் மரணம் அடைந்துள்ளார்.

தென் கொரியாவில் 1971-ம் ஆண்டு முதல் 1975-ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தவர் கிம் ஜாங் பில் (வயது 92). அதிகார பகிர்வு திட்டத்தின் கீழ் கடந்த 1998ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரையிலும் பிரதமராக இருந்துள்ளார். பிரதமராக இருந்தபோது, நாட்டின் உளவு பிரிவை உருவாக்கி அதற்கு தலைமையேற்றார்.

1961ல் ராணுவ தளபதி பார்க் தலைமையில் புரட்சி ஏற்பட்டு ஆட்சி கவிழ்ந்த போது, இந்த புரட்சியில் கிம் ஜாங் பில் முக்கிய பங்கு வகித்தார்.

இந்நிலையில், 2004-ம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வுபெற்று வீட்டில் ஓய்வு எடுத்து வந்த கிம் ஜாங் பில், முதுமை சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக, வீட்டில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவரது உடல்நிலை மோசமானதையடுத்து சியோல் நகரில் உள்ள சூன்சன்ஹியாங் பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். இத்தகவலை மருத்துவமனை உறுதி செய்துள்ளது.